திருநெல்வேலி: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 19) நிறைவுபெறுகிறது. இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஒருவரை மாற்ற கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது என்று பரபரப்பாகப் பேசப்படுகிறது.
அதாவது திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜாவை மாற்றிவிட்டு ஏற்கனவே அங்கு சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ரெட்டியார்பட்டி நாராயணனை வேட்பாளராக அறிவிக்கப்போவதாகத் தகவல் கசிந்துள்ளது.
தச்சை கணேசராஜா திருநெல்வேலி மாநகர மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். இவர் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிக ஆர்வம் காட்டிவந்தார். ஆனால் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதால் கணேசராஜாவுக்கு திருநெல்வேலியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
திட்டமிட்டப்படி திருநெல்வேலி தொகுதி அதிமுக கூட்டணியில் பாஜக ஒதுக்கப்பட்டு அங்கு நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது உறுதியான நிலையில் தச்சை கணேசராஜாவுக்கு நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
அங்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரசைச் சேர்ந்த ரூபி மனோகரன் நாங்குநேரியில் போட்டியிடுகிறார்.
நாங்குநேரி தொகுதியில் நாடார், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மக்களே அதிகம் வசிக்கின்றனர். ஆனால் அதிமுகவில் போட்டியிடும் கணேசராஜா தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். எனவே அவருக்கு வெற்றி வாய்ப்பு மிக மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.