திருநெல்வேலி: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை சில நாள்களுக்கு முன்பே தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
தொடர்ந்து அணைக்கு சராசரியாக 5 ஆயிரம் கன அடி நீர் வருவதால், இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் இருந்து 8,500 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
தரைப்பாலம் மூழ்கியது
இது தவிர நம்பியாறு, கொடுமுடியாறு, தென்காசி மாவட்டத்தில் இருக்கும் கடனா நதி ஆகியவற்றிலிருந்தும் அதிகளவு உபரிநீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, சீவலப்பேரி தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.
போக்குவரத்து துண்டிப்பு
இதையடுத்து அந்த வழியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அங்கு காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, சீவலப்பேரியில் இருந்து பாளையங்கோட்டை வழியாக திருநெல்வேலி மற்றும் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதன்படி சீவலப்பேரியில் இருந்து நாராயணபுரம் வழியாக சுமார் 20 கிமீ தூரம் மதுரை-நாகர்கோயில் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து திருநெல்வேலி செல்ல வேண்டி இருக்கிறது. இல்லாவிட்டால் வல்லநாடு வழியாக சுமார் 25 கிலோமீட்டர் தூரம் சுற்றி தூத்துக்குடி-திருநெல்வேலி நெடுஞ்சாலை வழியாகச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நீரில் மூழ்கிய சீவலப்பேரி தரைப்பாலம் இதற்கிடையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது குறித்து காவல் துறை தரப்பில் உரிய அறிவிப்பு எதுவும் செய்யாததால் வாகன ஓட்டிகள் பலர் தரைப்பாலம் அருகில் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
மேலும், ஆற்றில் சீரமைப்புப் பணிகள் உரிய முறையில் மேற்கொள்ளாததால் ஆகாயத்தாமரை செடிகள் மற்றும் குப்பைகள் தேங்கி நீர் செல்ல இடையூறாக உள்ளது.
தொடர்ந்து அப்பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தூத்துக்குடியில் கனமழை; வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் முத்து நகர மக்கள்