திருநெல்வேலி: நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் சீமான் தலைமையில் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாகச் செய்தியாளரைச் சந்தித்த சீமான், நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்களை நம்பி தேர்தலைச் சந்திப்பதாகவும், அதிகாரத்தில் இருப்பவர்கள்தாம் வெற்றிபெறுவார்கள் என்பது சர்வாதிகாரப் போக்கு எனவும் தெரிவித்தார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆட்சிக் காலத்தில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடந்ததாகச் சொல்லும் சீமான், ஆனால் தற்போது ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத்தான் தேர்தல் ஆணையம் செயல்படுகின்றது என்றார். மேலும் அதிமுக ஆட்சியில் நடந்த தேர்தலில் ஆள்கடத்தல் நடக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், "தற்போது திமுக ஆட்சியில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் கடத்தப்படுகிறார்கள். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே கருத்துரிமையை முடக்குகிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. ஒரு மாநிலத் தேர்தலையே பல கட்டங்களாக நடத்துகிறார்கள்.
ஒரு மாநிலத்தில் பிரச்சினை என்றால் அந்த மாநிலத்தில் ஆட்சி கலையும்பட்சத்தில் அத்தனை இடங்களிலும் தேர்தல் நடத்த முடியுமா? இந்தியாவில் பயன்படுத்தப்படும் வார்த்தை இயந்திரங்களை தயாரிக்கும் ஜப்பானில், வாக்குச்சீட்டில்தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.