தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொடூர குற்றங்களில் சிறார்கள் தப்ப முடியாது - முன்னுதாரணமாகும் நெல்லை மாணவன் கொலை வழக்கு - இளஞ்சிறார் நீதி குழுமம்

தமிழ்நாட்டிலையே முதல் முறையாக நெல்லையில் இளஞ்சிறார் வழக்கு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம்
மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம்

By

Published : Jul 6, 2022, 3:08 PM IST

நாடு முழுவதும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் கொலை போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட்டால் அது தொடர்பான வழக்குகள் இளஞ்சிறார்கள் நீதி குழுமத்தில் மட்டுமே விசாரிக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டாலும் கூட சம்பந்தப்பட்ட சிறுவர்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் மட்டுமே தண்டனை கிடைத்து வந்தது.

இது போன்ற நிலையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் படி 16 வயது நிறைந்த சிறார்கள் கொடூர குற்றங்களில் ஈடுபடும் பட்சத்தில் அவர்கள் முழுமையான பருவம் அடைந்தவர்கள் என கருதி அந்த குற்றத்திற்கான விசாரணையை இளஞ்சிறார் நீதி குழுமத்தில் இருந்து மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி வழக்கமான குற்ற நடைமுறை விசாரணையை பின்பற்ற வழிவகை செய்துள்ளது.

இதன் மூலம் அந்த குற்றத்துக்கு கூடுதல் தண்டனை விதிக்க முடியும். இந்த நிலையில் புதிய சட்ட திருத்தத்தின் படி தமிழ்நாட்டிலையே முதல் முறையாக நெல்லை மாவட்டத்தில் இளஞ்சிறார் வழக்கு ஒன்று இளஞ்சிறார் நீதி குழுமத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதாவது நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பள்ளக்கால் புதுக்குடி அரசு பள்ளியில் சில மாதங்களுக்கு முன்பு கையில் சாதி அடையாள கயிறு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் அங்கு பிளஸ் 2 பயின்று வந்த மாணவனை அதே பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்த மூன்று மாணவர்களால் கொடூரமாக கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்ட வழக்கு இளஞ்சிறார் நீதி குழுமத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கைதான மூன்று பேரில் ஒரு மாணவனுக்கு 16 வயது பூர்த்தியானதால் புதிய சட்டத் திருத்தத்தின்படி அம்மாணவனை பருவம் அடைந்தவராக கருதி அவன் மீதான விசாரணையை இளஞ்சிறார் நீதி குழுமத்தில் இருந்து நீக்கி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதன் மூலம் அச்சிறுவனுக்கு கூடுதல் தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சிறார்கள் என்ற போதிலும் கொலை போன்ற கொடூர செயலில் ஈடுபடும் இது போன்ற சிறுவர்களுக்கு குறைந்தபட்ச தண்டனை கிடைத்து வருவதால் சிறார் சட்டம் தவறான முன்னுதாரணமாக இருந்த நிலையில், தற்போது இச்சட்டத் திருத்தம் மூலம் சிறார்கள் கொடூர குற்றங்களில் ஈடுபடும் சம்பவம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நெல்லையில் முதல் முறையாக இச்சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்திருப்பதன் மூலம் சாதி மோதலால் சக மாணவர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட செல்வசூர்யாவின் வழக்கு மாநில அளவில் முக்கியத்துவம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காதலிக்கு கத்தி குத்து - கொடூர காதலன் கைது

ABOUT THE AUTHOR

...view details