திருநெல்வேலி: ரஜினியின் அரசியல் நுழைவு குறித்த அறிவிப்பை வரவேற்று, மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் நகரப் பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் கட்சி தொடங்கவிருப்பதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பைக் கேட்டு தமிழ்நாடு முழுவதுமுள்ள ரஜினி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
திருநெல்வேலியில் ரஜினியின் அறிவிப்பை வரவேற்று மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில் நகர பகுதியில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர். இச்சூழலில், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அவரது ரசிகர்களிடம் கருத்து கேட்டபோது, 50 ஆண்டுகாலம் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சி செய்தது போதும் என்றும் தமிழ்நாட்டில் மாற்றம் நிச்சயம் வேண்டுமென பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வெற்றிலை வியாபாரம் செய்து வரும் வடிவேலு கூறுகையில், ரஜினியின் அரசியல் அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இனி ஊழல்வாதிகள் வீட்டை பார்த்து கிளம்பவேண்டும். ஊழலற்றவர்களுக்கு மட்டும்தான் இனி அரசியலில் இடமுண்டு. ரஜினி பிற நடிகரை போல் இல்லாமல், ஆபாசமாக நடிக்க மாட்டார். தாய் தந்தையை மதிக்க எங்களுக்கு கற்றுக்கொடுத்தவர். இந்த மாற்றத்தை மக்கள் இப்போது ஏற்காவிட்டால் ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவித்தார்
இதேபோல், ஆட்டோ ஓட்டுநர் வேலய்யா கூறுகையில், எனக்கு ரஜினி படம் மிகவும் பிடிக்கும். நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். ரஜினி அரசியலுக்கு வந்தால் எங்கள் ஆதரவு அவருக்கு உண்டு. இரட்டை இலைக்கும், உதய சூரியனுக்கும் மாற்றி மாற்றி ஓட்டு போடுகிறோம். எனவே ஒரு மாற்றம் வேண்டும் என்று தெரிவித்தார்.
அதேபோல், டீக்கடை நடத்திவரும் ராஜா கூறுகையில், ரஜினி படத்தை நான் அதிகம் விரும்பி பார்ப்பேன். அவர் அரசியலுக்கு வந்தால் ஓட்டு போட்டு வெற்றி பெற வைப்போம். 50 ஆண்டு காலமாக திமுக அதிமுகவிற்கு ஓட்டு போட்டோம் இனியாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று தெரிவித்தார்
அதேபோல் நகரப் பகுதியில் சந்தைப்படுத்துதல் தொழில் செய்துவரும் சுப்பிரமணி கூறுகையில், ரஜினி மூலம் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் வேண்டும். 2021 ரஜினிகாந்த் ஆட்சி அமைப்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவரை விட்டால் வேறு ஆள் இல்லை. அவரது வயது முதிர்ச்சி மற்றும் அனுபவம் இருப்பதால் நல்லது செய்வார். எங்கள் குடும்ப ஓட்டு அவருக்குத்தான் என்று தெரிவித்தார்
நெல்லை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற துணைத்தலைவர் பகவதி கூறுகையில், ரஜினி அறிவிப்பை கேட்டு எல்லோரும் சந்தோஷம் அடைந்தோம் அவரது அறிவிப்பு டிசம்பரில் கட்சி ஆரம்பிக்கும். வரும் தேர்தலில் ஆன்மிக அரசியல் வெற்றி பெறும் என்றார்.
பூக்கடை நடத்தி வரும் கணேசன் கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவது சந்தோஷம் எங்களுக்கு ஒரு மாற்றம் வேண்டும் அவர் வந்தால் எல்லோருக்கும் நல்லது நடக்கும் ஆன்மிக அரசியல் சிறப்பாக இருக்கும் என்றார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து அவரது ரசிகர்களின் பார்வை மற்றொரு, பூ வியாபாரி ராமு பேசுகையில், ரஜினி அரசியலுக்கு வந்தால் நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம் கண்டிப்பாக வரவேண்டும் வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு அப்படியே இருந்து விடக்கூடாது. கண்டிப்பாக வந்து எங்கள் மானத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே பலர் கொந்தளித்துள்ளனர். அதிமுக திமுகவை பார்த்தாச்சு. எனவே சாதி மதம் இல்லாத அரசியலை ரஜினி ஏற்படுத்துவார். அதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம், என்றார்.
பழக்கடை நடத்தி வரும் ராஜா கூறுகையில், ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். சிறு வயதிலிருந்தே எனக்கு ரஜினி பிடிக்கும். அவர் அரசியலுக்கு வருவது மிகவும் சந்தோஷம் என்றார்.