தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காவலர்களின் அடக்குமுறைக்கு ஆளான இளைஞருக்கு ஆதரவாக நேதாஜி சுபாஷ் சேனை முற்றுகை போராட்டம்! - நாங்குநேரி சிறைச்சாலை

திருநெல்வேலி : காவல் துறைக்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அவருக்கு ஆதரவாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Petition to SP
Petition to SP

By

Published : Jul 7, 2020, 7:09 AM IST

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவர் மகாராஜன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் நேற்று (ஜூலை ஆறு) திருநெல்வேலி மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக பாதிக்கப்பட்டவர் அளித்திருந்த மனுவில், “நான் க்ரேன் ஆப்பரேட்டராக வேலை பார்த்து வருகிறேன். என் மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லாத நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாங்குநேரி காவல் துறையினர் எங்கள் பகுதியைச் சேர்ந்த நம்பி என்பவரைத் தாக்கினர்.

இதற்கு எதிராக பொது மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தினேன். அதன் காரணமாக என் மீது காவல் துறையினர் கோபத்தில் இருந்தனர். இந்த சூழ்நிலையில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி அன்று எனது உறவினர் கார்த்திக் திருட்டு வழக்கில் காணாமல் போயிருப்பதாகக் கூறி என்னை விசாரணைக்கு அழைத்தனர்.

அப்போது ஏழுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் எனது உறவினர் கார்த்திக் எங்கே இருக்கிறார் என்று சொல்லாவிட்டால் என்னை விட மாட்டோம் என்று மிரட்டினார். அப்போது தனிப்படை காவலர் விபின் நான் காவலர்களை எதிர்த்துப் பேசுவதாகக் கூறி என் கன்னத்தில் மூன்று முறை அறைந்தார். இரவு 11 மணி வரை விபினும், நம்பி ராஜனும் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத காவலர்கள் என்னை அடித்து துன்புறுத்தினார்கள்.

குறிப்பாக, இரும்பு குழாய் கொண்டு என் முகத்தில் குத்தி என்னை கடுமையாகத் தாக்கினார். பின்னர் மறுநாள் மே 19ஆம் தேதி அதிகாலை இரண்டு மணி அளவில் மீண்டும் தனிப்படை காவலர் விபின் வந்து என்னை மீண்டும் அடித்தார். தொடர்ந்து அதிகாலை மூன்று மணியளவில் நாங்குநேரி காவல் ஆய்வாளர் சபாபதி லத்தியால் பின்புறத்தில் அடித்தார். ”இவன் காவலர்களை எதிர்த்துப் போராடுபவன் இவனுக்கு நம்ம ட்ரீட்மென்ட் கொடுங்க” என்று ஆய்வாளர் கூறியதும் தனிப்படை காவலர் விபின் என்னை இரும்பு குழாயால் தொடை, முதுகு ஆகிய இடங்களில் அடித்துக் கொடுமை செய்தார்.

பின்னர் காலை ஒன்பது மணிக்கு உன்னி கிருஷ்ணன் என்ற மற்றொரு காவலர் என் துணிகளை அவிழ்த்து சட்டையைக் கிழித்து ஜட்டியுடன் நிற்க வைத்து என்னை கடுமையாக தாக்கினார். பிறகு மீண்டும் மே 20ஆம் தேதி அதிகாலை விபின் எனது கன்னத்தில் அறைந்து ஷூக்காலால் மிதித்தார். தொடர்ந்து ஆய்வாளர் சபாபதி, ”இவன அடிச்சிட்டீங்க, இப்படியே வெளியே விட்டா சரியா வராது. இவனையும் அந்த கேஸில் சேர்த்திருங்க” என்று கூறி என்னிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கி விட்டு திருட்டு வழக்கில் என்னையும் சேர்த்து விட்டனர்.

அடிப்பதோடு என்னை விட்டு விடுங்கள் வழக்குப் போடாதீர்கள் என்று எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை. மேலும் நீதிபதியிடம் ஆஜர்படுத்தும் போது நாங்கள் அடித்ததை கூறக்கூடாது கூறினால் உனது வண்டியையும் இந்த வழக்கில் சேர்த்து விடுவோம். அதோடு குண்டாஸ் போட்டு விடுவோம், தொழில் செய்ய விடமாட்டோம் என்று மிரட்டினார்கள். நானும் பயந்து போய் நீதிபதியிடம் காவலர்கள் அடித்ததை சொல்லவில்லை. பிறகு 11 நாட்களாக நாங்குநேரி கிளை சிறையில் இருந்து விட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளேன்.

நான் காவல் துறையினருக்கு எதிராக சட்டப்பூர்வமாக போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட ஒரே காரணத்திற்காக பழி வாங்கப்பட்டுள்ளேன். எனவே சட்ட முரணாக கஸ்டடியில் வைத்து கொலை வெறித்தனமாகத் தாக்கி, கேவலமாகப் பேசி, பொய்யான திருட்டு வழக்கு பதிவு செய்து என் வாழ்க்கையை சீரழித்த மேற்படி தனிப்படை காவலர் விபின், நாங்குநேரி காவல் ஆய்வாளர் சபாபதி, காவலர்கள் உன்னி கிருஷ்ணன், நம்பிராஜன் மற்றுமொரு அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத காவலர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிடத்திருந்தார்.

இதையும் படிங்க: அறையில் அழுகிக் கிடந்த ஆந்திர இளைஞர் உடல்

ABOUT THE AUTHOR

...view details