தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பூட்டிய குடோனில் தாது மணல் திருட்டா? அலுவலர்கள் திடீர் ஆய்வு - திருநெல்வேலி தாது மணல் திருட்டு

பூட்டிய குடோனிலிருந்து தாது மணல் கடத்தப்படுகிறதா என திருநெல்வேலியில் உள்ள விவி மினரல்ஸ் குடோனில் அலுவலர்கள் திடீர் ஆய்வுமேற்கொண்டனர்.

திருநெல்வேலி தாது மணல் திருட்டு, officers raid in vv minerals quarries in tirunelveli
திருநெல்வேலி தாது மணல் திருட்டு

By

Published : Nov 25, 2021, 9:24 AM IST

திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் பிரபல தொழிலதிபராக அறியப்படும் வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவனத்தில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்படுவதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு அலுவலர்கள் நடத்திய சோதனையில் தாதுமணல் கடத்தப்படுவது உறுதிசெய்யப்பட்டு, அவரது குடோன்கள் பூட்டி சீல்வைக்கப்பட்டுள்ளன.

ஏற்றுமதிக்குத் தடை

இருப்பினும், தொடர்ந்து தென்மாவட்டங்களில் சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாகவும், அதைத் தடுக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கவும், ஏற்றுமதி செய்யவும் தடைவிதித்தது.

மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ, வழக்கறிஞர் வி. சுரேஷ் நியமிக்கப்பட்டார். அவரும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார். அதில், கார்னட், இலுமினேட் உள்ளிட்ட தாதுமணல் ஏராளமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் கணிசமான அளவு, சட்டவிரோதமாக எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அலுவலர்கள் ஆய்வு

வழக்கறிஞர் சுரேஷ் தாக்கல்செய்த அறிக்கையைப் பரிசீலிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். இதன்பின்னர், தென் மாவட்டங்களில், சட்டவிரோதமாக தாதுமணல் எடுப்பதாகக் கூறுவதைக் கண்காணிக்க, அரசுத் தரப்பில் எடுத்த நடவடிக்கையைத் தெரிவிக்கவும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்திருந்தால், அது குறித்து அறிக்கை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிற்கும் அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், திசையன்விளை, நான்குநேரி தாலுகா வட்டாட்சியர்கள், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தென்காசி கோட்டாட்சியர்கள் உள்பட தாதுமணல் சுரங்கத் துறை அலுவலர்கள் தலைமையிலான மூன்று குழுக்கள் நேற்று (நவம்பர் 24) ராதாபுரம், திசையன்விளை, உவரி, வல்லான்விளை, ஆவுடையம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவி மினரல்ஸ் நிறுனத்திற்குச் சொந்தமான ஏழு தாதுமணல் குவாரிகளை ஆய்வுசெய்தனர்.

விரைவில் அறிக்கை

அந்த குவாரிகளில் வைக்கப்பட்டுள்ள தாதுமணல் இருப்பு, அவை அமைந்துள்ள நிலங்கள் கையிருப்பு, ஆக்கிரமிப்பு, சட்டவிரோதமாக தாதுமணல் குவாரிகள் செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வுமேற்கொண்டனர். ஏற்கனவே இக்குழுவினர் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஆய்வு நடத்தியதாகத் தெரிகிறது.

எனவே இந்த ஆய்வுகள் முடிந்ததும் இக்குழுவினர் தமிழ்நாடு அரசின் சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கூடங்குளம்: 2ஆவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details