தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஹலோ நான் டிஜிபி பேசுறேன்...போலீஸ் அதிகாரியிடமே 7.5 லட்ச ரூபாய் ஆன்லைனில் மோசடி - திருநெல்வேலி

டிஜிபி சைலேந்திர பாபு பேசுவதாக கூறி, நெல்லை காவலரிடம் நைஜீரிய இளைஞர் ஆன்லைன் மூலமாக 7.5 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார்.

ஹலோ நான் டிஜிபி பேசுறேன்...போலீஸ் அதிகாரியிடமே 7 லட்ச ரூபாய் ஆன்லைனில் மோசடி
ஹலோ நான் டிஜிபி பேசுறேன்...போலீஸ் அதிகாரியிடமே 7 லட்ச ரூபாய் ஆன்லைனில் மோசடி

By

Published : Aug 22, 2022, 2:18 PM IST

திருநெல்வேலி:மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு 12ஆவது சிறப்பு பட்டாலியன் கமாண்டண்டாக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன்.
இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தான் டிஜிபி. சைலேந்திரபாபு என்று கூறியதோடு, உங்களுக்கு அமேசான் பரிசு கூப்பன் அனுப்பப்படும், அதனை வாங்கிக்கொள்ளுமாறும் கூறியுள்ளார்.

அந்த போன் நம்பரில் வாட்ஸ்-அப் புகைப்படத்தை பார்த்தபோது அதில் டிஜிபியின் படம் இடம்பெற்றிருந்தது. இதனால் தனக்கு போன் செய்தவர் டிஜிபிதான் என நம்பிய கார்த்திகேயன் பரிசு கூப்பனை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. அதன் பிறகே அது போலி கூப்பன் என்றும், தன்னை ஆன்லைன் மோசடி கும்பல் ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதேபோல் பல்வேறு தவணைகளில் சுமார் ரூ. 7.5 லட்சம் வரை ஆன்லைன் மூலம் பணத்தை கார்த்திகேயன் இழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஆன்லைன் பரிசு கூப்பன் மோசடியில் ஈடுபட்டது நைஜீரிய இளைஞர் என்பது தெரியவந்தது.

கார்த்திகேயனை போல் தமிழ்நாடு முழுவதும் 7 அதிகாரிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். முதலில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு போன் செய்த நபர்கள் பின்னர் ஐபிஎஸ் அதிகாரிகள், வனத்துறை என பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் போன் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு விழிப்புணர்வு வீடியோ அனுப்பியிருந்தார். அதில் ஆன்லைன் மோசடி கும்பலிடம் விழிப்புடன் இருக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் கூறும்போது,”ஆன்லைன் மோசடிகளில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க ஆன்லைன் மோசடி செய்திகளை புறக்கணிக்க வேண்டும். டிஜிபியின் அமேசான் பரிசு கூப்பன் என்ற போலி குறுஞ்செய்தி வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்படுகிறது. காவல்துறை சார்பில் அதுபோன்று எந்த தகவலும் அனுப்பப்படவில்லை.

பொதுமக்களில் யாருக்கேனும் இதுபோன்று போலியான செய்தி வந்தால் தமிழ்நாடு சைபர் கிரைம் இணையதளத்திலும், 1930 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:அனைத்து சமூகத்தினரையும் அர்ச்சகர்களாக நியமிப்பதற்கான அரசின் உத்தரவை நீதிமன்றம் உறுதி செய்தது

ABOUT THE AUTHOR

...view details