தினமும் உதிக்கும் கதிரவனின் பார்வைபட்ட நொடியில் பூத்துக்குலுங்கும் மொட்டுக்களைபோல் சிரிக்கும் மழலைகளின் சிரிப்பில் மயங்காதவர்களே இல்லை. பெரும்பாலும் ஐந்து வயது வரை மழலைகள் செய்யும் குறும்புத்தனம் வாய்விட்டுச் சிரிக்கும் அளவிற்கு ரசனையாக இருக்கும் என்றே கூறலாம். மாறிவரும் காலத்திற்கு ஏற்ப தற்போது பிறக்கும் குழந்தைகள் சிறுவயதிலேயே அதிக விஷயங்களை கற்றுக் கொள்வதை கேள்விப்பட்டுவருகிறோம்.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் வெறும் மூன்று நிமிடத்தில் 53 திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். பாளையங்கோட்டையை சேர்ந்த பிரபுராஜ்-ஹரிப்ரியா தம்பதியின் மகன் சதுர் கிருஷ் ஆத்விக்.
இந்த பிரபுராஜ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் வல்லுநராகப் பணிபுரிந்துவருகிறார். அதேபோல் ஹரிபிரியாவும் பல் மருத்துவராக உள்ளார்.
இந்த நிலையில் சதுர் கிருஷ் ஆத்விக் தனது இரண்டு வயதில் தமிழ் பேசுவதில் ஆர்வமாக இருந்ததை அறிந்த பிரபு ராஜ்-ஹரி பிரியா தம்பதி சிறுவனுக்கு இரண்டு வயது முதலே தமிழ் நூல்கள் குறித்து கற்றுக் கொடுத்து வந்துள்ளனர். குறிப்பாக திருக்குறளை அதிகளவில் கற்றுக் கொடுத்துள்ளனர்.
அதன்படி, தற்போது சதுர் கிருஷ் ஆத்விக் எல்கேஜி படித்துவரும் நிலையில் தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போதும் வெளியில் அழைத்துச் செல்லும்போதும் காரில் வைத்து ஹரிபிரியா ஆர்வத்துடன் தனது மகனுக்கு திருக்குறளை சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக சதுர் கிருஷ் ஆத்விக் தனது நான்கு வயதிலேயே சரளமாக திருக்குறளை மனப்பாடமாக ஒப்புவிக்க கற்றுக் கொண்டுள்ளார்.
இதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த ஹரிப்பிரியா தனது மகனின் திறமையை வெளிக் கொண்டுவர முடிவு செய்துள்ளார். அதன்படி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை போட்டியில் சதுர் கிருஷ் ஆத்விக் சமீபத்தில் கலந்துகொண்டார். அப்போது சிறுவன் வெறும் மூன்று நிமிடத்தில் 53 திருக்குறளை மனப்பாடமாக பிழையின்றி ஒப்புவித்துள்ளார்.
இதையடுத்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சிறுவனைப் பாராட்டி உலக சாதனை விருது கொடுத்து கௌரவித்துள்ளனர். அதேபோல் குளோபல் ரெக்கார்டு ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனமும் சிறுவனுக்கு இளம் வயது சாதனையாளர் என்ற விருதை வழங்கி கௌரவித்துள்ளது. அதாவது மிகச் சிறிய வயதில் அதிக திருக்குறளை ஒப்புவித்த சிறுவன் என்ற விருது சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.