திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் தைப்பூசத் திருவிழா தொடங்கியது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடிப்பட்டம் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் மேளவாத்தியம் இசைக்க திருக்கொடி ஏற்றப்பட்டது.
தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற சிவாலயங்களுள் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதியம்மாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு கஜபூஜை, கோபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கொடிபட்டம் பல்லக்கில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் மேளவாத்தியம் இசைக்க திருக்கொடி ஏற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் மகாதீபாராதனையும் , சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் சுவாமி –அம்பாள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான வரும் 22ஆம் தேதி திருவிழாவின் 4ஆம் திருநாள் அன்று திருநெல்வேலி என பெயர் வரக்காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வும், 28ஆம் தேதி தாமிரபரணி நதிக்கரைக்கு சுவாமி எழுந்தருளி அங்கு தைப்பூச தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து 29ஆம் தேதி கோயில் நடராஜர் சவுந்தர சபா மண்டபத்தில் எழுந்தருளி பிருங்கி முனிவருக்கும் சிரேஷ்ட்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் திருநடனக்காட்சியும், 30ஆம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது.
இதையும் படிங்க: நெல்லையப்பர் கோயிலில் மொபைல் மூலம் தரிசனம்!