தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நெல்லை கல்குவாரி விபத்து; உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் தொடர்புடைய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே எஞ்சிய 3 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு களம் இறங்கியுள்ளது.

நெல்லை கல்குவாரி விபத்து; உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு
நெல்லை கல்குவாரி விபத்து; உரிமையாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு

By

Published : May 16, 2022, 10:29 AM IST

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த பாறை சரிவு விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். நேற்று காலை தீயணைப்புத் துறை, மீட்பு படை வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணியைத் தொடங்கிய போது முதற்கட்டமாக ஆறு பேரில் கிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் இருவரை பத்திரமாக மீட்டனர்.

அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாவதாக கிட்டாச்சி ஆப்பரேட்டர் செல்வத்தை மாலையில் மீட்டனர். ஆனால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே செல்வம் உயிரிழந்தார். இந்த நிலையில் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் குவாரியில் சிக்கியிருக்கும் மேலும் மூன்று பேரை மீட்பதற்காக, நேற்று இரவு 12 மணிக்கு விபத்து நடந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

முதற் கட்ட ஆய்வை முடித்து இன்று(மே 16) காலை 7 மணி அளவில் குவாரியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு இன்ஸ்பெக்டர் விவேக் ஸ்ரீவத்சவ் தலைமையில் மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளனர். குவாரியில் தற்போது பாறைகளுக்கு இடையே சிக்கி இருக்கும் லாரி ஓட்டுநர்கள் செல்வகுமார், ராஜேந்திரன் மற்றும் லாரி கிளீனர் முருகன் 3 பேரையும் மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இரண்டு குழுக்களாக பிரிந்து மீட்புப் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கல்குவாரியில் நடந்த விபத்து தொடர்பாக, முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் 304, 304 A, 336 மூன்று பிரிவுகளின் கீழ் குவாரி உரிமையாளர் சங்கரநாராயணன், குவாரி ஒப்பந்ததாரர் செல்வராஜ், அவரது மகன் குமார் மற்றும் மேலாளர் செபஸ்டின் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே உரிமையாளர் சங்கரநாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கிய 3 பேரின் கதி என்ன?

ABOUT THE AUTHOR

...view details