நெல்லை:தூத்துக்குடி மாவட்டம், ராமானுஜம்புதூர் வடக்கு பாப்பாங்குளம் பகுதியைச்சேர்ந்தவர், நம்பி. இவரது மனைவி பேச்சியம்மாள்(65). இவர் நெல்லை சந்திப்பில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க இன்று (ஆக.3) வந்துள்ளார்.
பின், வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் ஊர் திரும்ப நின்றுகொண்டிருந்த பேச்சியம்மாள், கை கழுத்தில் நகை அணிந்திருந்ததை நோட்டமிட்ட சந்தேகத்திற்குரிய பெண் ஒருவர் அவற்றை அபகரிக்க எண்ணி பேச்சு கொடுத்துள்ளார்.
தான் நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் தான் வேலை செய்கிறேன்; தங்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வாங்கித்தருகிறேன் என்று அவருக்கு ஆசைகாட்டியுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து அவர் மூதாட்டியை, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளார்.
உதவித்தொகை வாங்கித் தருவதாக ஏமாற்றப்பட்ட மூதாட்டி பின்னர், அந்த சந்தேகத்திற்குரிய பெண் கழுத்தில் நகைகள் இருந்தால் பணம் தரமாட்டார்கள் என்று கூறி, 6 சவரன் நகைகளையும் 1500 ரொக்கப்பணத்தையும் வாங்கி வைத்துகொண்டார். அனைத்தையும் வாங்கி கொண்ட அந்தப்பெண் ஒரு கையெழுத்து மட்டும் போட வேண்டும் என்று கூறி, அங்கிருந்து நைஸாக எஸ்கேப் ஆகினார். நீண்ட நேரமாகியும் அந்தப் பெண் வராததால் அதிர்ச்சியடைந்த பேச்சியம்மாள் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளார்.
அதற்கு அவர்கள், 'இது மருத்துவமனை, இங்க பணமெல்லாம் கொடுக்க மாட்டாங்கன்னு' சொன்ன பிறகே, தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து அழுது புலம்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து தகவலறிந்த காவல் துறையினர், அரசு மருத்துவமனை புற காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். பட்டப்பகலில் மூதாட்டியை நூதன முறையில் ஏமாற்றி அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்துச்சென்ற சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'பால் விநியோகத்தில் நாளொன்றுக்கு ரூ.2.4 கோடி ஊழல்' - ஜெயக்குமார் விமர்சனம்