இரட்டை நகரம் என்று அழைக்கக்கூடிய பாளையங்கோட்டை, திருநெல்வேலி மையப்பகுதியில் ஓடும் தாமிரபரணி ஆற்றின் வழியை இணைக்கும் வண்ணம் இரண்டு பாலங்கள் உள்ளன. திருநெல்வேலி சந்திப்பு பகுதியிலிருந்து கொக்கிரக்குளம் வழியாக வண்ணாரப்பேட்டையை இணைக்கும் வகையில் இந்த தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் நடுவே ஏற்கனவே சுமார் 177 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுலோச்சன முதலியார் பாலம் மக்கள் பயன்பாட்டில் இருந்துவருகிறது.
இதற்கிடையில் நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் பாலத்தின் அருகில் புதிதாக 18 கோடி ரூபாய் மதிப்பில் ஆத்துப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.
இருப்பினும் கொக்கிரக்குளத்தில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி ஆற்று பாலம் முடியும் இடத்தில் சாலை ஓரம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் பல மாதங்களாக இந்த புதிய ஆற்றுப் பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று (பிப். 23) மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் கொக்கிரகுளம் புதிய ஆற்றுப்பாலத்தை திறந்து வைப்பதாக தகவல் வெளியானது. ஆனால், நெல்லை மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்ட அதுபோன்ற ஏற்பாடு எதுவும் இல்லை என்று கூறினர்.
திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரபரணி பாலம் திறப்பு இதையொட்டி நேற்றிரவே (பிப். 23) ஆற்றுப்பாலம் சுற்றிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அமைச்சரோ, சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிற முக்கிய பிரமுகர்கள் யாரும் கலந்து கொள்ளாமல் எந்த ஆரவாரமும் இன்றி இன்று (பிப். 24) காலை திடீரென இந்த புதிய ஆற்றுப்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இதைக் கவனித்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள், இப்படி சத்தமில்லாமல் திறப்பதற்காகவா இத்தனை மாதங்கள் வீணாக பாலத்தை மூடி வைத்திருந்தார்கள் என்றனர். இதற்கிடையில் புதிய பாலம் திறக்கப்பட்டதால் கொக்கிரகுளம், வண்ணாரப்பேட்டை, நெல்லை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க...ஆய்வகத் தொழில்நுட்பனர்கள் நிலை 2 பதவி உயர்விற்கு இடைக்காலத் தடை!