திருநெல்வேலி:தமிழ் இலக்கிய பேச்சாளரான நெல்லை கண்ணன் இன்று (ஆகஸ்ட் 18) திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள அவரது வீட்டில் வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77. அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக அவர் சாப்பிட முடியாத அளவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். நெல்லை கண்ணன் அவரது தமிழ் இலக்கிய பேச்சாற்றலால் ‘தமிழ்க்கடல்; என அழைக்கப்பட்டார். தமிழ் மொழி மீதும், இலக்கியம் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர். சிறந்த இலக்கியவாதியாக அறியப்பட்டவர் மற்றும் பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், இலக்கியவாதி என பன்முகத் திறமை கொண்டவர்.
காமராஜர் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாகப் பழக்கம் வைத்திருந்த நெல்லை கண்ணன் ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியின் தீவிர பேச்சாளராக இருந்தார். குறிப்பாக காமராஜர் மீது அதிக பற்று கொண்டவர். பெரும்பாலான மேடைகளில் காமராஜரைப் பற்றி பேசுவார். 1996ஆம் ஆண்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட்டார். நெல்லை வழக்காடு மொழிக்கேற்ப தனது பேச்சில் ’அவன், இவன்’ என சாதாரணமாக தான் பேசுவார். எனவே, இவரது பேச்சு அனைவரும் ரசிக்கும்படி இருந்தது.