திருநெல்வேலி:சின்னத்திரை நடிகர் புகழ் கைப்பேசி கடையின் இணையதளத்தை தொடங்கி வைத்துவிட்டுச்சென்ற சில மணிநேரங்களிலேயே, மாநகராட்சி அலுவலர்கள் அக்கடையை பூட்டி சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் பவனத்தில் கைப்பேசி விற்பனையகத்தின் சேவை இணையதள தொடக்கவிழா நடைபெற்றது. இதில் தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான ‘குக் வித் கோமாளி’ தொடர் நடிகர் ‘புகழ்’ கலந்துகொள்வதாக இருந்தது.
அப்போது நிகழ்ச்சி தொடங்கிய நேரத்தில், அங்கு வந்த நடிகர் புகழை காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டனர். மேலும் கரோனா நடைமுறைகளை கருத்திற்கொள்ளாமல் அவருடம் செல்ஃபி எடுக்க முயன்றனர். இதனால் கூட்டத்தினை கலைக்க காவல் துறையினர் லேசாக தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து விழா இடத்திலிருந்து புகழ் கிளம்பிச் சென்றுள்ளார்.
பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் புகழ் கலந்துகொண்ட நிகழ்ச்சி தொடர்ந்து சம்பவம் குறித்து நிகழ்ச்சி நடத்திய கடைக்கு சென்ற மாநகராட்சி அலுவலர்கள், கரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி கடைக்கு சீல் வைத்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், “இவ்வளவு நாள்களாக அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்லாயிரக் கணக்கான மக்களைத் திரட்டி கூட்டங்களை நடத்தினர். செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். இதெல்லாம் இந்த அலுவலர்களுக்கு தெரியவில்லையா” என பொதுமக்கள் புலம்பிச் சென்றனர்.