தமிழகத்தின் தேர்தல் களம் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் தினசரி பிரச்சாரங்களால் சூடுபிடித்துள்ளது. திமுகவை பொறுத்தளவில் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அடுத்து தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையும் விரைவிலேயே தொடங்க இருக்கிறது. ஆனால், அதிமுகவிலோ கூட்டணி குறித்தே இன்னும் உறுதியான முடிவு தெரியாமல் இருக்கிறது. இருந்தபோதும், பாஜக 40 தொகுதிகளும், அதற்கும் மேலாக பாமகவும், இவர்கள் இருவருக்கும் மேலாக தொகுதிகள் தங்களுக்கு கிடைக்க தேமுதிகவும் முயல்வதாகவும் செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையே இன்னும் தொடங்கப்படாத போது, நெல்லை சட்டமன்ற தொகுதியில் பாஜகவினர் போட்டியிட தீவிரம் காட்டி வருவது, நெல்லை மாவட்ட அதிமுகவினரை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இத்தொகுதியை பாஜக குறிவைக்க முக்கிய காரணம் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன். முன்பு அதிமுகவில் இருந்த நயினார், ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராகவும் இருந்தவர். பின்னர் பாஜகவில் சேர்ந்து மாநிலத் துணைத் தலைவரானார். ஆனாலும் தலைவர் பதவியை எதிர்பார்த்து சோர்ந்திருந்த நயினாரை, அதிமுக கூட்டணியில் திருநெல்வேலி தொகுதியை எப்படியாவது பெற்று வெற்றிபெற வைப்பதாக உறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது