நாங்குநேரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த வசந்தகுமார், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அத்தொகுதிக்கு கடந்த 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. காங்கிரஸ், திமுக கூட்டணி சார்பில் தொழிலதிபர் ரூபி மனோகரன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் களம்கண்டார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில், எடப்பாடி பழனிசாமி ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார்.
இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி, நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் என மொத்தம் 23 பேர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.
மொத்த வாக்காளர்கள் இரண்டு லட்சத்து 57 ஆயிரத்து 418 பேர். அவர்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 624 வாக்குகள் பதிவாகின. இது 66.35 விடுக்காடு ஆகும். இந்நிலையில் 299 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை சற்று காலதாமதமாக 8.45-க்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 14 மேசைகள் போடப்பட்டு மொத்தம் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. நேரடியாக தேர்தல் அலுவலர்கள் கண்காணிப்பில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது.
அரசியல் கட்சி | பெற்ற வாக்குகள் |
காங்கிரஸ் | 61 ஆயிரத்து 932 |
அதிமுக | 95 ஆயிரத்து 377 |
ஹரி நாடார் (சுயேச்சை) | நான்காயிரத்து 242 |
நாம் தமிழர் | மூன்றாயிரத்து 494 |
நோட்டா | ஆயிரத்து 154 |