திருநெல்வேலி தொகுதி திமுக வேட்பாளர் லட்சுமணனை ஆதிரித்து, அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தச்சநல்லூரில் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவு திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் ஏடிஎம் வாசல் முன்பு வெயிலில் கிடந்து இறந்தனர். செல்லாத 1000 ரூபாய் நோட்டை போன்று, மோடியையும் எடப்பாடி பழனிசாமியையும் வரும் தேர்தலில் செல்லாக் காசாக்க வேண்டும்.
இதுவரை தமிழகத்திற்கான ஜிஎஸ்டி வரி 15,000 கோடி ரூபாயை, மத்திய அரசுக்கு கொடுத்துள்ளோம். அதை திருப்பிக் கேட்டால், நிதி நெருக்கடி இருப்பதால் தர முடியாது என்கிறார் மோடி. ஆனால், அவர் மட்டும் செல்வதற்காக 8,000 கோடியில் புது சொகுசு விமானம் வாங்கியுள்ளார். 10,000 கோடியில் புது நாடாளுமன்றம் கட்டுகிறார். இது யார் பணம்? இதையெல்லாம் நீங்கள்தான் தட்டிக் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி கேட்க மாட்டார். மோடி நில் என்றால் நிற்பார், முட்டிப்போடு என்றால் முட்டி போடுவார். இன்னும் கொஞ்சம் விட்டால் தமிழ்நாட்டையே மோடியிடம் விற்று விடுவார். அதை அனுமதிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி உதயசூரியனுக்கு வாக்களிப்பது தான்” என்றார்.