தமிழ்நாட்டின் 35ஆவது மாவட்டமாக திருநெல்வேலியிலிருந்து தென்காசியை தனியாக பிரித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசு அறிவித்தது. இதில் தென்காசி, சங்கரன்கோயில் என இரண்டு வருவாய் கோட்டங்களும், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சதுரகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோயில், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய 8 வட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
மாவட்டம் உருவாகியதன் முதல் மாவட்ட ஆட்சியராக அருண் சுந்தர் தயாளனும், காவல் கண்காணிப்பாளராக சுகுணா சிங்கும் பொறுப்பேற்றனர். பழைய பத்திரப்பதிவு அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அரசு உதவிபெறும் பள்ளியிலும் தற்காலிகமாக தற்போது இயங்கி வருகின்றன.
இந்நிலையில், புதிதாக மாவட்ட ஆட்சியர் கட்டடம் கட்ட தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, இலத்தூர், ஆய்குடி, பாட்டக்குறிச்சி, ஆயிரப்பேரி உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அதன்படி, அப்போதைய வருவாய் ஆணையர் ராதாகிருஷ்ணன், இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆயிரப்பேரியில் அரசுக்கு சொந்தமான 35 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தை சுற்றி விவசாய நிலங்கள், குளங்கள் இருப்பதால், ஆட்சியர் அலுவலக கட்டடம் அமைக்க அந்த இடம் உகந்தது அல்ல எனக்கூறி, திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் மதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இதில் தலைமைச் செயலக செயலர், வருவாய்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு விளக்கம் கேட்டு விசாரணையை அக்டோபர் 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.