கூடங்குளத்தில் அணுஉலை கழிவு கிட்டங்கி அமைப்பதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் குறித்த எச்சரிக்கை அறிக்கையை அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ளது. அதில், ‘கூடங்குளம் அணுஉலையில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்குக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவதென்றால், நேரடி பாதிப்புக்குள்ளாகும் மக்களிடம்தானே கருத்துக் கேட்க வேண்டும்? கூடங்குளம், இடிந்தகரை, கூத்தன்குழி போன்ற கிராமங்களில் அதை நடத்தினால்தானே அர்த்தமுள்ளதாக இருக்கும்?
- இந்தியாவிலுள்ள அணுஉலைகள் அனைத்திலிருந்தும் வெளிவரும் கழிவுகளை நிரந்தரமாகப் புதைக்கும் 'ஆழ்நிலக் கருவூலம்' (Deep Geological Repository) ஒன்றை முதலில் அமையுங்கள். அதன்பிறகு, கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் 'தற்காலிக அணுக்கழிவு மையம்' (Away From Reactor) அமைப்பை நிறுவுவது பற்றிக் கவலைப்படலாம்.
- இனி நடக்கவிருக்கும் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் அனைத்திலும் திட்டப்பகுதியிலுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதனைச் சட்டமாக இயற்றுங்கள். திமுக தலைவர் அவரது கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் கருத்துத் தெரிவிப்பார்கள் என்று அறிவித்திருப்பது ஒரு நல்ல முன்னேற்றம். எல்லாக் கட்சிகளும் இதைச் செய்ய முன்வர வேண்டும்.
- இனிவரும் காலங்களில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் பன்னாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். அந்தக் கூட்டம் முழுவதுமாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டும். பெரும்பான்மை மக்கள் முடிவே இறுதி முடிவாக இருக்க வேண்டும்.