கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே ஆலஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் மெர்லின் ஷானி (25). இவர் தனியார் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். மேலும், தனது வீட்டில் மாணவ மாணவிகளுக்கு டியூசன் வகுப்பு நடத்தி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஜெபமணி என்பவரது மகன் ஜெனிஸ் (16) டியூசன் வருவது வழக்கம். இவர் களியல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை ஜெனிஷ், டியூசன் ஆசிரியை மெர்லின் ஷானி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது மெர்லின் ஷானியிடம், மாணவன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை கூச்சலிட்டதால், மாணவன் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மெர்லின் ஷானி உடலின் பல பகுதிகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த ஷானியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், சுயநினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்பட்டதால் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது வீட்டருகில் உள்ள டியூசன் ஆசிரியையை பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொள்ள முற்பட்டதோடு கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே மாணவன் ஜெனிஸ் தலைமறைவாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியையின் தாயார் பேட்டி இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் வன்புணர்வு புகார்: ஆட்டோ ஓட்டுநரின் நண்பனுக்கு சிறை!