கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்கிணறு பகுதியிலிருந்து களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், கன்னியாகுமரியிலிருந்து களியக்காவிளை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத அளவில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பெரும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதன் காரணமாக பல்வேறு விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுவருகின்றன. இதுகுறித்து மத்திய அரசிடம் பலமுறை தெரிவித்த பிறகும் சாலைகளை செப்பனிட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து சாலைகளை செப்பனிடாத மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பாக குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியல் போராட்டத்திற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் பிரின்ஸ் எம்எல்ஏ உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
மத்திய அரசுக்கு எதிராக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் இந்தச் சாலை வழியாகத்தான் திருவனந்தபுரம் செல்ல வேண்டுமென்பதால் வெளிமாநில பேருந்துகளும் உள்ளூர் பேருந்துகளும் நீண்ட வரிசையில் நெடுநேரமாகக் காத்திருந்தன. இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் வசந்தகுமார் எம்பியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் உள்பட 300 பேரையும் கைது செய்தனர்.