திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில், ஜனவரி 10ஆம் தேதி முதல் நான்கு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அதிகாலையில் தொடங்கி நள்ளிரவு வரை அவ்வப்போது மிதமான மழையும், கனமழையும் கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்தச் சூழலில், தற்போதுவரை திருநெல்வேலியில் மழை நிற்காமல் பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 8 மணி நேரத்தில் மட்டும் 260 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக பாபநாசத்தில் 60 மில்லி மீட்டர் மழையும், மணிமுத்தாறில் 42 மில்லி மீட்டர், அம்பை பகுதியில் 40 மி.மீ., சேரன்மகாதேவியில் 28 மி.மீ., பாளையங்கோட்டையில் 25 மி.மீ., ராதாபுரம், திருநெல்வேலி மாநகரில் தலா 23 மி.மீ., நாங்குநேரியில் 18 மி.மீ., மழையும் பதிவாகி உள்ளது.
இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால், அணைகளில் நீர்வரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (ஜனவரி 13) நள்ளிரவு பாபநாசம் அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என்பதால், பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.