நெல்லைபருத்திப்பாட்டைச்சேர்ந்த கூலித்தொழிலாளி, மகாராஜன் என்பவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இளைய மகள் நல்லத்தாய்(15). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அவர் உடல்நிலைப் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்பொழுது நல்லத்தாய் சுய நினைவில்லாமல் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில் கரோனா தடுப்பூசி போட்டதால்தான், தனது மகள் இதுபோன்று உடல்நலம் பாதிக்கப்பட்டதாக அவரது தந்தை மகாராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து மகாராஜன் இன்று (செப்.12) செய்தியாளர்களிடத்தில் கூறும்போது, 'எனது மகள் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, பள்ளியில் அவளுக்கு கரோனா தடுப்பூசி போட்டதன் பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டது. வழக்கமாக, தடுப்பூசி போட்டால் காய்ச்சல் வரும் என்பதால் நாங்களும் அலட்சியமாக விட்டுவிட்டோம்.
நாளுக்கு நாள் உடல்நிலை மிக மோசமானதால் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலனில்லை. இறுதியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். தற்போது அவள் சுய நினைவில்லாமல் சிகிச்சைப் பெற்று வருகிறாள். ஆனால், தடுப்பூசிப் போட்டப் பிறகுதான், எனது மகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, அரசு எனது மகளைக் காப்பாற்றித் தர வேண்டும்' எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், தந்தை, சகோதரி ஆகிய மூவரும் இன்று நெல்லை ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில், 'மாணவியின் இந்தப் பாதிப்பால் குடும்பமே மிகவும் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறோம். எனவே, முதலமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் மனுவில் கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: சீரம் நிறுவனம் மோசடி வழக்கு: பல்வேறு மாநில வங்கிகளில் பணப்பரிவர்த்தனை