அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற பெயரில் திமுக தனது பரப்புரைப் பயணத்தை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அண்மையில் தங்களது பரப்புரைப் பயணத்தை தொடங்கினார்.
அந்தவகையில், திமுக பேச்சாளரும், பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளருமான திண்டுக்கல் லியோனி இன்று நெல்லை மாவட்டத்தில் இருந்து தனது பரப்புரைப் பயணத்தை தொடங்கினார். நெல்லை கோபாலசமூத்திரத்தில் மக்கள் சந்தித்து பேசிய அவர், கிராம உதயம் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடம் அவர்களது தேவைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர் ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய லியோனி, “திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவுப்படி, 16 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பரப்புரை பயணத்தைத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இன்று நெல்லையில் எனது பரப்புரையைத் தொடங்கியுள்ளேன். இது வழக்கமான பரப்புரை அல்ல. மக்கள் சந்திப்பு இயக்கமாக நடத்துகிறோம். அதாவது மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்துப் பெற்று, அதற்கேற்ப தேர்தல் அறிக்கை தயார் செய்ய தான் இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறுகிறது.