திருநெல்வேலி: ஊரக உள்ளாட்சித் தேர்தல் மாவட்டத்தில் முதற்கட்டமாக அக்.6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக அக்.9ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நெல்லை திமுக கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி பதவிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று (செப்.21) வெளியிடப்பட்டது.
பாளையங்கோட்டை தியாகராஜ நகரிலுள்ள கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் பட்டியலை வெளியிட்டனர். இதனைத் தொடர்ந்து நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 12 பதவியிடங்கள் உள்ளன.
76 இடங்களில் திமுக போட்டி
இதில், ஒன்பது இடங்கள் நெல்லை கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்டது. இதில் எட்டு இடங்களில் திமுக போட்டியிடுகிறது. ஒரு இடம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம், பாளையங்கோட்டை ஆகிய ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் 89 ஒன்றிய கவுன்சிலர் பதவியிடம் உள்ளது.