திருநெல்வேலி:தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமுள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வேட்பாளர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலர்கள் முறைகேடாக ஊராட்சி நிதியைக் கையாடல் செய்துவருவதாகப் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடைபெற்று விரைவில் ஊராட்சிகளுக்குத் தலைவர்கள் பொறுப்பு ஏற்கவுள்ளதால் போகிறபோக்கில் கிடைக்கும் வரை லாபம் என்ற நோக்கில் ஊராட்சி நிதியை செயலர்கள் கையாடல் செய்வதாகக் கூறப்படுகிறது.
17 லட்சம் ரூபாய் பணம் கையாடல்
அந்த வகையில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கஸ்தூரிரங்கபுரம் ஊராட்சியில் ஊராட்சி நிதியை கையாடல் செய்த ஊராட்சிச் செயலர் பாலசுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மூன்று பேருக்கு அவர்களுக்குத் தெரிவிக்காமலேயே திடீரென 17 லட்சம் ரூபாயை ஊராட்சிப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.
தற்போது வேலை எதுவும் பார்க்காத நிலையில் திடீரென பணம் தங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதையறிந்து ஒப்பந்ததாரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து ஊராட்சி செயலரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘நான்தான் பணத்தைப் போட்டேன் அந்தப் பணத்தை எனக்கு வங்கியில் எடுத்துக் கொடுங்கள் உங்களுக்கு ஒரு கமிசன் தருகிறேன்’ எனப் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.