திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பார்லர்கள், ஆவின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் இன்று (மே 30) திருநெல்வேலி சென்றார்.
அதன்படி, பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள ஆவின் பார்லர், டவுண் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள ஆவின் பார்லர், மேலப்பாளையம், அரசு பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பார்லர்களையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.
அங்கு நடைபெறும் விற்பனைகளின் விபரம், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் விலை ஆகியவற்றை முகவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் உற்பத்தி நிலையத்தின் பால் பாக்கெட்டுகள் தயார் செய்யும் இடம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் இடங்கள் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டார்.
பந்தய குதிரைகளாக செயல்படுகிறோம்!
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "ஊரடங்கு காலத்தில் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் ஆய்வு பணிகள், களப்பணிகளைச் செய்து பந்தயக் குதிரை வேகத்தில் செயல்பட்டு வருகிறோம். இதன்மூலம், கரோனா நோயைத் தடுத்திடும் முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றி கண்டுள்ளார்.
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டு அனைத்து மாநிலங்களும் பாராட்டி வருகிறன. ஊரடங்கு காலத்தில் மிகவும் அத்தியாவசியத் தேவையான பால், உற்பத்தியாளர்களிடமிருந்து சரியான முறையில் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்வது குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.