தென்காசி:குறிஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்குப் புத்தாண்டு தினத்தன்று அப்பகுதியிலுள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் விளையாட்டுப் போட்டி நடத்துவதற்கு அனுமதி மறுத்தது தொடர்பாக இன்று டிசம்பர் 2ஆம் தேதி சங்கரன்கோவில் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. அதில் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை.
அமைதி எட்டப்படாதநிலையில் பேச்சுவார்த்தை
இது தொடர்பாக, மீண்டும் அமைதிக் கூட்டம் மூலம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஹஜ்ரத் பேகம் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இன்று அமைதிக் கூட்டம் நடைபெற்றது.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாவளன் மற்றும் 6 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டத்தில், ஆதி திராவிட மக்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி தரப்பட வேண்டும் என்று கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்குக் கோட்டாட்சியர் ஹஜ்ரத் பேகம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி அனுமதி பெற வேண்டும் எனக் கூறினார்.
கூட்டத்திற்குப் பின் நமது செய்தியாளரிடம் பேட்டியளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பாவளன், 'அமைதிக் கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை . அறவழியில் போராட்டம் தொடரும்' எனவும் கூறியுள்ளார்.
குடும்ப அட்டை ஒப்படைப்பு
மேலும், குறிஞ்சாங்குளம் கிராமத்தில் ஆதி திராவிடர் சமுதாய மக்கள் 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். முன்னதாக, டிசம்பர் 31ஆம் தேதி அப்பகுதி மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், 200க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று திருவேங்கடம் வட்டாட்சியரிடம் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்தனர்.
இதன் பின்னர், நேற்று அக்கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று 2ஆம் நாளாக உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது.
இது பற்றி பேசிய அவர், நாளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரைச் சந்தித்துப் பேச உள்ளதாகவும் அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு பேச்சுவார்த்தை எட்டப்படும் என நம்புகிறோம் எனவும்; அதே சமயம் குறிஞ்சாங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்ந்து அறவழியில் போராட இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெஸ்ஸி உள்பட 4 பிஎஸ்ஜி வீரர்களுக்கு கரோனா!