திருநெல்வேலி: பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்றுடன் பொதுத்தேர்வு முடிவு பெற்றதைக் கொண்டாடும் விதமாக கேக் வெட்டியுள்ளனர். அப்போது அங்கிருந்த மாணவர்கள் இருதரப்பாகப் பிரிந்து திடீரென மோதலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில்,இந்த மோதலின்போது, மாணவர் ஒருவரை மேல் சட்டை இல்லாமல் அரை நிர்வாணத்துடன் பேருந்து நிலையத்தின் பிரதான சாலைகளில் சக மாணவர்கள் ஓடவிட்டு தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதல் சம்பவத்தில் 10ஆம் வகுப்பு மாணவன் மற்றும் 11ஆம் வகுப்பு மாணவன் என இருவர் காயமடைந்துள்ளனர்.
மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான காணொளி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாளையங்கோட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மாணவர்களுக்கு இடையே ஏதேனும் காதல் விவகாரமாக இந்த மோதல் நடந்திருக்கலாம் என்று நடத்திய விசாரணையில், காவல்துறைக்கு இந்த மோதலின் பின்னணியில் சாதிய தலையீடு இருப்பதாக பகீர் தகவல் வெளியானது. இது குறித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் ஒருவர் கூறுகையில், சாதி கயிறு கட்டியதால்தான் தங்களை தாக்கினார்கள்.
கேக் வெட்டிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, ஏற்கனவே அங்கு இருதரப்பினர் சண்டைப் போட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது நாங்கள் அடிப்பதற்கு ஆள்களை அழைத்து வந்ததாக நினைத்து எங்களையும் அந்தத் தரப்பினர் தாக்கினர் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாளை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே சமீபத்தில் பள்ளி மாணவன் ஒருவர் கையில் சாதி கயிறு கட்டிய காரணத்தால் ஏற்பட்ட மோதலில் சக மாணவர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் நடந்தேறியுள்ளது. இதுபோன்ற சூழலில் நெல்லை மாநகரில் தற்போது கல்வி நிலையங்களுக்கு பெயர் பெற்ற பாளையங்கோட்டையில் சாதி ரீதியாக இருதரப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கி கொண்டதாக கூறப்படும் சம்பவம் சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சாதி கயிறு விவகாரம்: அரசு நடவடிக்கை!