தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆட்சி, கட்சிப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்டவர் பி.எச். பாண்டியன் - முதலமைச்சர் புகழாரம் - நெல்லை அரசியல் செய்திகள்

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் ஆட்சிப் பணியிலும், கட்சிப் பணியிலும் சிறப்பாகச் செயல்பட்டவர் என அவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

ஆட்சி பணியிலும் கட்சி பணியிலும் சிறப்பாக செயல்பட்டவர் பி.எச். பாண்டியன்
ஆட்சி பணியிலும் கட்சி பணியிலும் சிறப்பாக செயல்பட்டவர் பி.எச். பாண்டியன்

By

Published : Jan 4, 2021, 9:25 PM IST

திருநெல்வேலி: மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் நினைவாக அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தபேரியில் மணிமண்டபம் கட்டப்பட்டு, அவரது உருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த மணிமண்டபத்தின் திறப்பு விழா கோவிந்தபேரியில் இன்று (ஜன. 04) மாலை, நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி. முனுசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட அனைவரையும் பி.எச். பாண்டியன் மகனும், அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான மனோஜ்பாண்டியன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் மணிமண்டபத்தை திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பி.எச். பாண்டியனின் உருவச் சிலையைத் திறந்துவைத்தார்.

ஆட்சிப் பணியிலும் கட்சிப் பணியிலும் சிறப்பாகச் செயல்பட்டவர் பி.எச். பாண்டியன்

பின்னர் நடந்த விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடலுக்குப் பொருத்தமான, பெருமைக்குரியவர் பி.எச். பாண்டியன்.

அவர், கட்சிப் பணி, ஆட்சிப்பணி, சமூகப் பணியில் துடிப்புடனும், துணிச்சலுடனும் செயலாற்றியவர். தனது சொந்த ஊரான கோவிந்தப்பேரியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 ஏக்கர் இடத்தை இலவசமாக வழங்கியவர்.

இந்தப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் நாங்குநேரி பச்சையாறு திட்டம், கொடுமுடியாறு திட்டம் ஆகிவற்றை நீதிமன்றத்திற்குச் சென்று போராடி பெற்றுத்தந்தவர். இந்திய தேர்தல் ஆணையர் டி.என். சேஷனுக்குப் பின்புதான், தேர்தல் ஆணையத்திற்கு மரியாதை ஏற்பட்டது. அதுபோல பி.எச். பாண்டியன் சபாநாயகர் ஆன பிறகுதான் சட்டப்பேரவை அவைத் தலைவருக்கு வானளாவிய அதிகாரம் உண்டு என்பதை அனைவராலும் அறிந்துகொள்ள முடிந்தது" என அவருக்குப் புகழாரம் சூட்டினார்.

அதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், "பன்முகத்தன்மை, அறிவாற்றலுடன் செயல்பட்டவர் பி.எச். பாண்டியன். அதனால்தான் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்குப் பல்வேறு பதவிகள் கொடுத்து அழகு பார்த்தார்கள்.

இந்தப் பகுதியில் கன்னடியன் கால்வாய்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செய்து இப்பகுதி மக்களிடம் அசைக்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தவர் பி.எச். பாண்டியன். கட்சிக்கும் ஆட்சிக்கும் பி.எச். பாண்டியனின் சேவை தேவை என்கிற நிலையில் அவர் மறைந்தது அதிமுகவிற்கும், மக்களுக்கும் மிகப்பெரிய இழப்பு" என்றவர், இந்த மணிமண்டபம் மூலம் இளைஞர்கள், அடுத்த தலைமுறையினர் அவரைப் பற்றி அதிகமான விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்றும், அவரது புகழ் காலத்தால் அழியாமல் இருக்கும் எனவும் கூறினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு புதிய பெயர் சூட்டிய மு.க. ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details