திருநெல்வேலி:திமுக ஆட்சிக்கு வந்ததும் ஓராண்டிற்குள் 1 லட்சம் மின் இணைப்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 8 மாத காலத்தில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் நெல்லை மண்டலத்தில் இருக்கும் நெல்லை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் என ஒட்டுமொத்தமாக 5 ஆயிரத்து 349 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன.
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை மின் பகிர்மான வட்டத்தில் மொத்தம் 3 ஆயிரத்து 423 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், நெல்லை மாவட்டத்தில் மட்டும் 1154 மின் இணைப்புகளும், விருதுநகர் மாவட்டத்தில் 874 மின் இணைப்புகளும், தென்காசி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 769 மின் இணைப்புகளும், குமரி மாவட்டத்தில் 301 மின் இணைப்புகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 757 விவசாய மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மண்டல மின் பகிர்மானம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று(ஏப்ரல் 16) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை நேரலையில் காண திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.