நெருங்கிவரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுவருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று திருநெல்வேலி மாவட்டம் வாகையடி முக்கு பகுதியில் திறந்தவேனில் நின்றபடி தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டார்.
5ஆம் ஆண்டில் ஆட்சி!
அப்போது பேசிய அவர், "இருபெரும் தலைவர்களின் வழியில் நான்கு ஆண்டுகளை நிறைவுசெய்து ஐந்தாம் ஆண்டில் அதிமுக ஆட்சி அடியெடுத்துவைத்துள்ளது. நான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் திமுக தலைவர் ஸ்டாலின், ஒரே மாதத்தில் ஆட்சி கவிழும், மூன்று மாதத்தில் கவிழும், ஆறு மாதத்தில் கவிழும் என்று போகும் இடங்களில் எல்லாம் பேசினார். ஆனால் இன்று ஐந்தாம் ஆண்டில் ஆட்சி நடைபெற்றுவருகிறது" என்று பெருமையுடன் தெரிவித்தார்.
சாதனைகளைப் பட்டியலிட்ட எடப்பாடி
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "நான்கு ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் இந்த அரசு விருதுபெற்றுள்ளது. 2006-2011ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது தமிழ்நாட்டில் கடும் மின்வெட்டு ஏற்பட்டது. ஆனால் இன்று தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்துவருகிறது.
இந்தியாவிலேயே இரண்டாயிரம் மினி கிளினிக்குகள் அமைத்த ஒரே மாநிலம் என்ற வரலாற்றையும் நாங்கள் படைத்துள்ளோம். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டுவந்து சாதனைப் படைத்துள்ளோம்.
திருநெல்வேலியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை வெற்றிபெறச் செய்வீர்!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 100-க்கு 49 பேர் உயர் கல்வி பயின்றுவருகின்றனர். எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்" என்று கூறினார்.
இதையும் படிங்க: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து