திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில்உள்ள காருக்குறிச்சி என்ற கிராமத்தின் பெயரை, நாடு முழுவதும் உள்ளவர்கள் அறிய காரணமாக இருந்தவர் நாதஸ்வர கலைஞர் அருணாச்சலம். இவர் முன்னாள் குடியரசுத்தலைவர் ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, முன்னாள் முதலமைச்சர் காமராஜர் போன்றோரை தன் நாதஸ்வர கலையால் ஈர்த்த பெருமைக்குரியவர். தன்னுடைய இன்னிசை எழுப்பும் நாதஸ்வரக் கலையால் புகழ்பெற்று விளங்கிய இவர், 'கொஞ்சும் சலங்கை' எனும் திரைப்படத்தில் வந்த 'சிங்கார வேலனே தேவா...' என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நூற்றாண்டு விழா:இத்தகைய சிறப்புகள் பலவற்றுக்கும் சொந்தக்காரரான காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழா கடந்தாண்டு ஜூன் 24ஆம் தேதி தொடங்கியது. பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் அவரது நூற்றாண்டு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலியில் தமிழ் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழா நெல்லை டவுன் பகுதியில் நடைபெறுகிறது.