தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 2, 2020, 12:10 PM IST

ETV Bharat / city

கரோனா பாதிப்பு: எளிய முறையில் நடைபெற்ற வேளாங்கண்ணி கல்லறை திருநாள்

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2 ஆம் தேதி இறந்தவர்களை நினைவு கூறும் விதமாக சகல ஆத்மாக்களின் திருநாள் என்ற பெயரில் கல்லறை திருநாள் கடைபிடித்து வருகின்றனர். அதன்படி இன்று (நவ.2) கல்லறை திருநாள் கடைபிடிக்கப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களின் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து உணவு பண்டங்களை வைத்து படையலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

வேளாங்கண்ணி கல்லறை திருநாள்
வேளாங்கண்ணி கல்லறை திருநாள்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் கல்லறை திருநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆலயத்தைச் சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்களின் சமாதிக்கு பேராலய பங்குத்தந்தை சூசை மாணிக்கம் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு, சிறப்பு திருப்பலி செய்தார். வேளாங்கண்ணி கடந்த 2004 ஆம் ஆண்டில் சுனாமியால் இறந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அடக்கம் செய்யப்பட்ட கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ள கல்லறை தோட்டத்திலும் வேளாங்கண்ணி பேராலயத்தின் சார்பில் கல்லறை திருநாள் வழிபாடு நடைபெற்றது.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லறை தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் காலை முதல் ஜெபம் செய்து முன்னோர்களை வழிபட்டனர். உடையார்பட்டி கல்லறைத் தோட்டத்தில் வழக்கம்போல் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தில் உயிரிழந்தவர்களின் கல்லறை முன்பு ஜெபம் செய்தனர். திரு இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை ஜோமிக்ஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இந்த கல்லறை திருநாளில் பங்கேற்றனர்.

விழுப்புரம்

விழுப்புரத்தில் கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களின் கல்லறைகளுக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தினர். சிஎஸ்ஐ செயிண்ட் பால்ஸ் கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் அஞ்சலி செலுத்தினர்.

இதையும் படிங்க: கல்லறை திருநாளில் கிறிஸ்தவர்கள் மூதாதையர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை!

ABOUT THE AUTHOR

...view details