திருநெல்வேலி:கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டதை எதிர்த்து கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டம் உடையார்பட்டி பகுதியில் உள்ள திரு இருதய ஆண்டவர் தேவாலயத்திற்கு சொந்தமான கல்லறைக்குள் புகுந்து அடையாளம் தெரியாத நபர்கள் 50க்கும் மேற்பட்ட கல்லறைகளை சில தினங்களுக்கு முன்பு சேதப்படுத்தினர். இதனைக் கண்டித்து கிறிஸ்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இச்சூழலில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும், பழங்குடியின மக்களுக்காக போராடி வரும் ஸ்டேன் சுவாமியை 83 வயதில் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நெல்லை மாவட்டத்தில் இன்று கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதன்படி பாளையங்கோட்டை தூய சவேரியார் பேராலயத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெண்கள் குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆலயத்தின் பங்கு தந்தை ராஜேஷ் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டம் நடத்திய கிருஸ்தவர்கள் இது குறித்து பங்கு தந்தை ராஜேஷ் கூறுகையில், அனைத்து மதங்களும் அன்பை விதைக்கும் படி மக்களுக்கு போதிக்கிறது. ஆனால் சில விஷமிகள் இதுபோன்ற மத மோதல்களை தூண்டிவிடுகின்றனர். சில தினங்களுக்கு முன்பு உடையார் பட்டியில் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதை கண்டித்தும், பழங்குடியின மக்களுக்கு போராடிய ஸ்டேன் சுவாமி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.