திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கு அக்.6ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனால், கடந்த ஒருவாரமாக நடைபெற்று வரும் தேர்தல் பரப்புரை இன்று (அக்.04) மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. இதையொட்டி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் இன்று இறுதி நாள் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அந்த வகையில் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 6ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பூபதி ராஜாவை ஆதரித்து, திருநெல்வேலி தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் இன்று கேடிசி நகர் மங்கம்மாள் சாலைப்பகுதியில் தீவிரப்பரப்புரையில் ஈடுபட்டார்.
பின்னர் அவர் சீவலப்பேரி சாலை வழியாக சென்றபோது, எதிர் திசையில் இருந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 6ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் சுந்தர், கீழநத்தம் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்க வேட்பாளர் சுமதி ஆகியோரை ஆதரித்து விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.