திருநெல்வேலி: சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பொதுமக்கள் அனைத்து வியாபாரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகளை மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சரி செய்திட வேண்டும் எனவும், இல்லையென்றால் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து மிகப்பெரிய அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என முடிவுசெய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், "நெல்லை மாநகரில் சாலைகள் குண்டும் குழியுமாக மக்கள் பயணிக்க முடியாத அளவில் மிகவும் மோசமாக உள்ளது. சாலைகளின் அவலநிலையால் பால், சிலிண்டர் போடுபவர்கள் மாநகரத்தில் பயணிக்க முடியாத சூழலால், வீடுகளுக்கு பொருள்களை டெலிவரி செய்ய அதிக விலை கேட்கும் நிலை உள்ளது.
மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் இந்தச் சாலைகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் அனைத்துக் கட்சியினரை ஒன்றுதிரட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னிலையில் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும்.
வெள்ள பாதிப்புப் பணிகளை அரசு வேகமாக மேற்கொள்ள வேண்டும். வடகிழக்குப் பருவ மழை தமிழ்நாட்டில் வழக்கத்தைவிட அதிகப்படியாகப் பெய்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அரசு கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நயினார் நாகேந்திரன் பேட்டி வெள்ள பாதிப்புக்கு காரணம் அதிமுக அரசுதான் என திமுக அரசு குற்றம் சுமத்துகிறது. ஆட்சி பொறுப்பேற்று தமிழ்நாடு அரசு ஆறு மாத காலத்தில் எந்தப் பணிகளும் சரிவர செய்யவில்லை. ஆறு மாத காலத்தில் அதிமுக அரசு செய்யாத பணிகளை திமுக அரசு செய்திருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:உலகளவிலுள்ள ஆராய்ச்சியாளர்களில் இடம்பெற்ற அண்ணா பல்கலை. பேராசிரியர்கள்!