திருநெல்வேலி: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக திருநெல்வேலி சந்திப்பில் அமைந்துள்ள பாரதியார் படித்த பள்ளியான மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு நினைவு நாளை, ஒரு மாத காலமாக அனுசரிக்க முடிவுசெய்துள்ளனர்.
இதனால், நாள்தோறும் காணொலிக் காட்சி வாயிலாக கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மதிதா மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று (ஆக. 20) வருகைதந்தனர்.
வகுப்பறையில் புகைப்படம்
பின்னர், பாரதியார் பயின்ற வகுப்பறையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வ.உ. சிதம்பரனார், பாரதியார் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையடுத்து, பாரதியார் வகுப்பறையில் அமர்ந்து படித்த மேசையில், அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.