தமிழ்நாடு சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு பொறுப்பேற்றார். திருநெல்வேலி மாவட்டத்தில் யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படாத சூழ்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவு சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் எளிய மனிதராக அறியப்படும் சபாநாயகர் அப்பாவு, தனது எளிமைக்கு மேலும் உதாரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். தான் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக நேற்று(மே.13) தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்துக்கு அப்பாவு வந்தார். ஆனால் வந்தவுடன் வீட்டுக்குச் செல்லாமல் நேராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கரோனோ தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, காவல் உயர் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர்.
ஆய்வுக் கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் இருந்த மேடையில் சபாநாயகர் அமைச்சர்கள், அலுவலர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, அவரவர் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். கூட்டம் தொடங்கியதும் மாவட்ட ஆட்சியர் பேசிக் கொண்டிருந்தபோது, சபாநாயகர் அப்பாவு திடீரென எழுந்து நின்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் எங்கே என்று தேடினார்.