தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவிய நிலையில், பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்
இந்தச் சூழ்நிலையில் நெல்லை மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஒருசிலர் மாநகர் முழுவதும் சுவரொட்டி அடித்து ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் சுவரொட்டி அடித்தவர் யார் என்பதைக் குறிப்பிடாமல் மானூர் ஒன்றியம் என்ற பெயரில் மொட்டையாக சுவரொட்டி அடித்து ஒட்டினர்.
அதில் ஓபிஎஸ்ஸின் முடிவைக் கேட்டு ஆலோசிக்காததால்தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம். இனியும் அந்த நிலை நீடித்தால் அதிமுக தலைமைக் கழகத்தை முற்றுகையிடுவோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.
அதிமுகவினரின் சுவரொட்டி சண்டை இந்தச் சம்பவம் நெல்லை மாவட்ட அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவம் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் புகார் அளித்திருந்தார்.
மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், எதிர்க்கட்சியினர் செய்த சதி காரணமாகச் சுவரொட்டி ஒட்டி இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் மறுநாள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சுதா பரமசிவம் உள்ளிட்ட பல நிர்வாகிகள் போஸ்டர் அடித்து ஒட்டினர்.
இதனால் நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாள்களாக அதிமுகவினர் இடையே சுவரொட்டி சண்டை நடைபெற்றுவந்தது.
இந்தச் சூழ்நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாகச் சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் காவல் துறையினர் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி மானூர் ரஸ்தாவை சேர்ந்த மாயகிருஷ்ணன் உள்பட மூன்று பேர் மீது மானூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மானூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் லட்சுமணன் பெருமாள் கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
அதிமுகவினரின் சுவரொட்டி சண்டை அதிமுகவில் உள்ள இரண்டு தலைவர்களுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டப்பட்டு நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக ஒட்டிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் இருந்துவருகின்றனர்.