திருநெல்வேலி:ராதாபுரம் அருகே உள்ள கிராமத்தில் இயங்கி வந்த காற்றாலையில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வள்ளியூர், ராதாபுரம் சுற்றுவட்டாரப்பகுதியில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டு காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் கடந்த மூன்று மாதங்களாக தென்மேற்கு பருவக்காற்று சீசன் என்பதால் காற்றாலைகள் முழு நேரமும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ராதாபுரம் அருகே உள்ள கோலியாங்குளம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த காற்றாலை ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் காற்றாடியின் மூன்று இறக்கைகளின் மையப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிவதால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. மேலும் அருகில் குடியிருப்புப்பகுதி அமைந்துள்ளதால் இறக்கைகள் எரிந்து கீழே விழும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்களும் அச்சமடைந்துள்ளனர்.