தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கிறேன் - சிறுமியின் தளராத நம்பிக்கை - இயற்கையின் நியதி

கின்னஸ் சாதனைச் செய்ய 14 வயசு முடிஞ்சிருக்கணுமாம். நான் இன்னும் மூனு வருசம் அதுக்காக காத்திருக்கணும் மழலை மொழி மாறாமல் பேசும் பிரிஷாவின் குரலெல்லாம் நிறைந்திருக்கிறது நம்பிக்கையின் ஊற்று. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா அங்கிள், என்னைப் பற்றி 'காம்பிடிட்டிவ் எக்ஸ்சாம்ஸ்ல' எல்லாம் கேள்வி கேட்டிருக்காங்க மழலை முகம் பூரிக்க சிரிக்கிறார் சிறுமி பிரிஷா.

nellai yoga star
nellai yoga star

By

Published : Oct 20, 2020, 7:51 PM IST

Updated : Oct 27, 2020, 12:14 PM IST

சரி யார் இந்த பிரஷா எனக் கேட்பவர்களுக்கு, யோகராணி, யோககலா, யோகஸ்ரீ, உலகின் இளம் யோகா டீச்சர் என தான் வாங்கிய பட்டங்கள் மூலமாக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் இந்த சாதனைச் சிறுமி!

நெல்லை மாவட்டம், வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த, கார்த்திகேயன் - தேவிபிரியா தம்பதியின் மகள் பிரிஷா. அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில், 6ஆம் வகுப்பு படிக்கும் பிரிஷாவுக்கு வயது பதினொன்று. இதற்குள், 41 உலக சாதனைகள், 200க்கும் அதிகமான மெடல்கள், விருதுகள் என தன் அறையெல்லாம் விருதுக்குவியலாக்கியிருக்கிறார்.

வீடெல்லாம் விருதுகளாக

யோகா கலையில் தொடர் சாதனைகள் நிகழ்த்தி வரும் பிரிஷாவின், யோகா ஆர்வத்திற்கு விதை போட்டவர், வழக்கறிஞரான அவரது தாயார் தேவிபிரியா. அதற்கு உரமிட்டு உருவாக்கியவர், யோகா உதவிப் பேராசிரியையான பாட்டி சந்திரிகா.

யோகா மீதிருந்த ஆர்வத்தால் தேவிபிரியா வீட்டில் யோகா செய்ய தொடங்க அதைப் பார்த்த பிரிஷா, தனது ஒன்றாம் வயதில் தாயாரிடமிருந்து யோகா கற்றுக் கொள்ள ஆரம்பித்திருகிறார். மகளின் ஆர்வத்தைப் பார்த்த தேவிபிரியாவும் மகளுக்கு யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார். விளையாட்டுத்தனமாக ஆரம்பித்தாலும் பிரிஷாவின் கற்கும் ஆர்வம், ஐந்தாவது வயதில் அவரை தேசிய விருதை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு வளர்த்திருக்கிறது.

பெற்றோருடன் சாதனைச் சிறுமி பிரிஷா

பெரியவர்களுக்கே மிகவும் சவாலாக இருக்கும் பேருண்டாசனம், ராஜகப் போட்டாசனம், வாமதேவ ஆசனம், ஏகபாத வாமதேவ, குட்த மற்றும் சுப்த பத்மாசனம் போன்றவற்றை, ஒரே நிமிடத்தில் பல முறை செய்து சிறுமி சாதனை படைத்திருக்கிறார். தேசிய அளவில் சாதித்த பிரிஷாவின் தொடர் பயிற்சி, கடந்த, 2018ஆம் ஆண்டு அவருக்கு, 9 உலக சாதனைகளை வசமாக்கியிருக்கிறது. அடுத்த ஒரு வருடத்திற்குள், 41 உலக சாதனைக்குச் சொந்தக்காரராகியிருக்கிறார் பிரிஷா.

கற்றுத் தேர்ந்த கலைஞன் அந்தக் கலையை அடுத்தவர்களுக்கு கடத்துவது இயற்கையின் நியதி. அது இந்த சின்ன யோகா கலைக்கும் பொருந்தும். தான் கற்ற யோகா கலையை நெல்லையிலுள்ள விழித்திறன் இழந்தோர் பள்ளி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். தன்னலமற்ற சிறுமியின் சேவைக்கு இயற்கை கொடுத்த பரிசு, இவரிடம் யோகா கற்ற கணேஷ்குமார் என்ற விழித்திறனிழந்த மாணவரையும் யோகாவில் உலக சாதனையாளராக்கியுள்ளது.

பிரிஷாவின் இந்த சாதனைகளைப் பார்த்த, டெல்லியில் உள்ள நியூ ஜெருசலேம் பல்கலைகழகம், இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி பாராட்டியுள்ளது. மத்திய அரசும் சமீபத்தில் உலகின் இளம் யோகா ஆசிரியர் என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்திருக்கிறது.

பயிற்சி முயற்சி என பட்டாம்பூச்சியாய் திரிந்த பிரிஷாவை கரோனா ஊரடங்கு கொஞ்சம் முடக்கிப் போட்டிருக்கிறது. இருந்தும், தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாய் அடுத்த கட்டத்திற்கு தன்னைத் தயார் படுத்தியிருக்கிறார்.

இந்த முறை யோகாவுடன், தியானப் பயிற்சியும் இணைந்து கொள்ள கண்களைக் கட்டிக் கொண்டு ஸ்கேட்டிங், சைக்கிளிங் ரீடிங் என அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தயாராகியிருக்கிறார். பிரிஷாவின் பயிற்சிக்கும் முயற்சிக்கும் மீண்டும் இயற்கை துணை புரிய, சிறுமிக்கு மூன்றாவது கண் திறந்து கொண்டாதாக சொல்கிறார் அவரது தாயார் தேவிபிரியா.

புதிய பயிற்சியின் மூலம், கண்களைக் கட்டிக் கொண்டு, இரண்டு கைகளிலும் எழுதுவது, புத்தகம் வாசிப்பது, சைக்கிள் ஓட்டுவது என அடுத்த பரிணாமங்களுக்கு நகர்ந்திருக்கிறார்.

கண்களை கட்டிக் கொண்டு பிரிஷா ஏதாவது வேலையில் இருக்கும் போது, பக்கத்து அறையிலிருந்தோ, எதிர் திசையில் யாரேனும் வந்தாலோ கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்களை அடையாளம் கண்டு விடுகிறார். ஏதாவது வண்ணப் பொருளை அவர் கையில் கொடுத்தால், அதன் நிறத்தை சரியாக சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்.

ஒரு புத்தகத்தைக் கொடுத்து, நாம் தேர்வு செய்யும் பக்கத்தில் என்னென்ன வரிகள் இருக்கிறது என்பதை பிழை இல்லாமல் வாசித்து அசத்துகிறார். கண்ணை மூடிக்கொண்டு கணிதத்திலும் பிரிஷா சாதனை படைத்து வருகிறார். அதாவது பல எண்களுக்கு இணையாக 9ஆவது எண்ணை பெருக்கி அதற்கான விடையை ஒரே நிமிடத்தில் எழுது விடுகிறார். அடுத்து, நீருக்கடியில் அதிக நேரம் அமர்ந்து யோகா செய்து கின்னஸ் சாதனை படைக்க காத்திருக்கிறார்.

இத்தனை சாதனைக்கும் சொந்தக்காரியான பிரிஷா, உலகத்திலேயே சின்ன வயசுல டாக்டர் பட்டம் வாங்கியது நான் தான். உலகத்திலேயே சிறிய யோகா ஆசிரியர் என்ற பட்டத்தையும் மத்திய அரசு எனக்குக் கொடுத்துள்ளது. நான் கடந்த இரண்டு வருஷமா மாற்றுத் திறனாளிகள், காவல்துறையினர் மற்றும் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் யோகா கற்றுக் கொடுக்கிறேன். கிராமத்தில் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக யோகா கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. தற்போது தினமும் ஆன்லைனில் மாணவர்களுக்கு யோகா கற்றுக் கொடுக்கிறேன். ரொம்ப நேரம் தண்ணீரில் உட்கார்ந்து யோக செய்து கின்னஸ் சாதனை படைக்கணும்னு ஆசை. 14 வயதுக்குப் பிறகு தான் கின்னஸ் சாதனை புரிய முடியுமாம். எனக்கு பதினோரு வயது தான் ஆகிறது. கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கிறேன் என்கிறார்.

குழந்தை வளர்ப்புங்கிறது ஒரு குழந்தை நம்ம வயித்துல இருக்கும் போதே ஆரம்பிக்கிறதுனு நினைக்கிறேன். பிரிஷா வயிற்றில் இருக்கும் போதே இந்த குழந்தை பெரிய அளவில் சாதிக்கணும், உலகமே திரும்பி பார்க்கிற ஆளா வரணும்னு நான் நினைச்சேன். அப்போதிருந்தே நேர்மறையான எண்ணங்களை நிறைய வளர்த்துக்கிட்டேன். நான் யோகா செய்றதைப் பார்த்து, ஒரு வயசுல அவளும் யோகா செய்ய ஆரம்பிக்க நான், நேச்சரோபதி மற்றும் யோகாசனம் பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று அவளுக்கும் முழுசா கத்துக் கொடுத்தேன். எங்கள் நம்பிக்கைகளைப் பொய்யாக்காமல், எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளாள் என பூரிக்கிறார் பிரிஷாவின் தாய் தேவிபிரியா.

நாளைய கின்னஸ் சாதனைக்காரிக்கு இன்றே நாம் ஒரு பூங்கொத்து கொடுத்து வைப்போம்!

அட்வான்ஸ் வாழ்த்துகள் பிரிஷா!

Last Updated : Oct 27, 2020, 12:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details