தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையத்திற்கு ரூ.5 கோடி செலவு! - தூத்துக்குடி துப்பாக்கி சூடு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை ஆணையத்திற்கு ரூ.5 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெற்றுள்ளார்.

பிரம்மா (வழக்கறிஞர்)
பிரம்மா (வழக்கறிஞர்)

By

Published : Jun 7, 2022, 6:22 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் அவ்வப்போது நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், துப்பாக்கி சூடு உயிரிழப்புகள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர்கள், அலுவலர்கள் தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட ஆணையங்களின் விவரங்கள் அதற்கு செலவிடப்பட்ட தொகை குறித்த தகவலை திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மா தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக பெற்றுள்ளார்.

அதில் கடந்த 2001 முதல் 2020ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் 23 ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மற்ற ஆணையங்கள் செயல்பாட்டில் இல்லை. 2001 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக நீதிபதி ராமன் கமிஷன் அமைக்கப்பட்டது. அதுமுதல் ஏர்வாடி தர்கா உயிரிழப்பு, சென்னை மாநகராட்சி கூட்டத்தில் ஏற்பட்ட கலாட்டா, கும்பகோணம் பள்ளி தீ விபத்து, எம்ஜிஆர் நகர் விபத்து உயிரிழப்பு, மதுரை சுரேஷ் என்கவுண்டர், திருச்செந்தூர் வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர், பரமக்குடி துப்பாக்கிச்சூடு இளவரசன் மரணம், மவுலிவாக்கம் கட்டட விபத்து ஆகியவை முக்கியமானவைகளாக பார்க்கப்படுகிறது.

பிரம்மா (வழக்கறிஞர்)

இந்த ஆணையங்கள் விசாரணை அறிக்கையை அந்தந்த அரசுகளிடம் வழங்கிய போதும் அதற்கு பிறகு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது விடை தெரியாத கேள்வியாகவே தொடர்கிறது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கூறி வந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி நீதியரசர் ஆறுமுகசுவாமி ஆணையம் அமைக்கப்பட்டது. தற்போது வரை இந்த ஆணையம் செயல்பாட்டில் உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பலோ மருத்துவர்கள் உள்ளிட்டோர் இதில் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த ஆணையத்திற்கு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 3 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது ஆக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி திரண்டு வந்தனர். அவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தை சம்பவம் நடைபெற்ற மறுநாளே அமைத்தார். இந்த ஆணையம் கடந்த மாதம் அதன் அறிக்கையை தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளது. இந்த ஆணையத்திற்கு மட்டும் 5 கோடியே 60 லட்சத்து 3 ஆயிரத்து 700 ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 - 19 ஆம் நிதியாண்டில் ஆணையரின் ஊதியம் மற்றும் செலவினங்களுக்காக மட்டும் ஒரு கோடியே 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், 2019 - 20 ஆம் ஆண்டில் ஒரு கோடியே 50 லட்சத்து 80 ஆயிரத்து 700 ரூபாயும், 2020 - 21 ஆம் நிதியாண்டில் ஒரு கோடியே 33 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயும், கடந்த நிதி ஆண்டில் ஒரு கோடியே 52 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சம்பளத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட நான்கு கோடி ரூபாய் செலவழிக்கபட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டில் அதிகபட்சமாக அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு தான் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:ஆவினில் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கப்படுவது இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ABOUT THE AUTHOR

...view details