சேலம்மாநகரப் போக்குவரத்து தலைமைக்காவலர் பாண்டியன் என்பவர் மீது தாக்குதல் நடத்திய முன்னாள் எம்.பி. வி.பன்னீர்செல்வம் அண்ணன் மகனை போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து தலைமைக் காவலர் பாண்டியன், இன்று (செப்.15) காலை 10 மணியளவில் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஓரியண்டல் சக்தி தியேட்டர் பகுதியில் நின்று போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தபோது பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த கோகுல்ராஜ்(23) என்பவர் இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு வழிப்பாதையில் செல்போன் பேசியபடி வந்துள்ளார். இதைக் கண்டு கோகுல்ராஜை நிறுத்தி, 'ஏன் இப்படி செல்போன் பேசி வருகிறீர்கள்? பழைய பேருந்து நிலையம் பகுதி வாகனங்கள் அதிகம் வந்து செல்லும் இடம். விபத்து ஏதும் ஏற்பட்டுவிடாதா' எனக் கூறி கண்டித்துள்ளார்.
இதில் கோபமடைந்த கோகுல்ராஜ், போக்குவரத்து காவலர் பாண்டியனிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் போக்குவரத்து காவலர் பாண்டியனை கையால் தாக்கினார். இதில் பாண்டியனுக்கு மூக்கு பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.