சேலம்:தமிழ் கடவுள்களில் முழு முதற் கடவுளாக கருதப்படும் முருகனுக்கு உலகிலேயே உயரமான சிலை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் கோயிலில் அமைந்துள்ளது.
அங்கு 140 அடி உயரத்தில் பெரிய முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் இந்தக் கோயிலில் தரிசனம் செய்து வருவார்கள். உலகத் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முருகன் கோயில் இதுவாகும்.
இந்த நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்து உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரமுள்ள ஸ்ரீ முத்துமலை முருகர் சிலை நிறுவப்பட்டு வருகிறது
இந்த சிலையை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த ஸ்தபதி தியாகராஜன் தலைமையிலான குழுவினர் வடிவமைத்து வருகின்றனர்.
ஸ்தபதி தியாகராஜன் திருவாரூரைச் சேர்ந்தவர். இவர் தலைமையில் மலேசியாவில் உள்ள முருகன் சிலையை விட பிரம்மாண்டமாக 146 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக செய்யப்பட்டு தற்பொழுது பணிகள் நிறைவடைந்துள்ளது.