சேலம்: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம், கோயம்புத்தூர், வேலூர், கடலூர் ஆகிய மண்டலங்களில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் வைத்து நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, "தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் தொழில் கூடங்களாக மாறியுள்ளன. படிப்படியாக சுங்கச்சாவடிகளில் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். குறிப்பாக சுங்கச்சாவடி கட்டணம் குறைவாக இருந்தால், மக்களே விரும்பி கட்டணத்தை செலுத்துவார்கள். ஆனால் கட்ட முடியாத அளவிற்கு சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிக்கப்பட்டு குண்டர்களை வைத்து வசூலிக்கப்படுகிறது. இதனைக் கண்டித்து தொடர்ச்சியாக நாங்கள் போராடி வருகிறோம்.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என ஒவ்வொரு பகுதியிலும் கடை வாடகை பலவகையில் உயர்த்தப்பட்ட நிலையில் வாடகை வசூலிக்கப் படுகிறது. இவை அனைத்திற்கும் ஒரே சீரான வாடகை கட்டணத்தை அரசே நிர்ணயிக்க வேண்டும்.
ஒன்றிய அரசு ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்களை தடைசெய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வணிகர்கள் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. நெகிழி பொருள்களுக்கு பதிலாக மாற்றுப்பொருள் ஏற்படுத்தித் தரவும் நாங்கள் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.
வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பேட்டி வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை பெரிய லாரிகள் மூலம் கடத்தி வருகிறார்கள். அவர்களை கண்டறிந்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து பிணையில் வெளியில் வராத வகையில் அவர்கள் மீது நடவடிக்கை கடுமையாக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.