தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தகர்க்க முடியாத வீரபாண்டி ஆறுமுகம் கோட்டை; வெற்றி யார் பக்கம்? - தருண் திமுக

ஒட்டுமொத்தமாக சேலம் மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்திகளாக விளங்கிய வீரபாண்டி ஆறுமுகத்தின் ரத்த சொந்தங்களுக்கு இந்தமுறை இரண்டு கட்சிகளும் சீட் வழங்காமல் ஒதுக்கி வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

veerapandi election special
veerapandi election special

By

Published : Mar 30, 2021, 4:17 PM IST

Updated : Mar 30, 2021, 11:39 PM IST

சேலம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி முக்கியமானது, அது அமைச்சர்களை நமக்கு தந்த தொகுதி. அதனால் இப்போதும் நட்சத்திரத் தகுதி பெற்றுள்ளது. 2021 தேர்தலுக்கு இங்கு அதிமுக , திமுக, அமமுக வேட்பாளர்கள் மும்முரமாக தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர். மும்முனை போட்டியில் வீரபாண்டி சட்டப்பேரவைத் தொகுதி சூடு பிடித்துள்ளது.

இத்தொகுதியில் ஆளும் அதிமுக சார்பில் ராஜா என்கிற ராஜ முத்து , திமுக சார்பில் டாக்டர் தருண், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.கே.செல்வம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மக்கள் நீதி மய்யம் கூட்டணி சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் அமுதாவும், நாதக சார்பில் ராஜேஷ் குமாரும் களத்தில் இருக்கின்றனர்.

அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம், 2001 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு திமுக வேட்பாளரை தோற்கடித்தவர். அதனால் இந்த முறை அவர் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு கடும் போட்டியை உருவாக்கியுள்ளார். இவர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் ஆவார்.

சேலம் திமுகவின் தூணாக விளங்கிய முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன்களுக்கு திமுக சார்பில் ' சீட் ' வழங்கப்படாதது, சேலம் திமுகவினர் மத்தியில் பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது.

தகர்க்க முடியாத வீரபாண்டி ஆறுமுகம் கோட்டை; வெற்றி யார் பக்கம்?

சேலம் திமுக மூத்த நிர்வாகி கருத்து:

இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத சேலம் திமுக மூத்த நிர்வாகி கூறுகையில், "வீரபாண்டி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூத்த மகன் செழியனின் மருமகன் டாக்டர் தருணுக்கு திமுக தலைமை சீட் வழங்கியுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் ராஜா தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தது பொய்த்துப்போனது.

அதேபோல வீரபாண்டி ஆறுமுகத்தின் இன்னொரு மகனான பிரபுவும், கோடிக்கணக்கில் செலவு செய்து சேலம் திமுகவில் முக்கியமான இடத்தை பிடித்து வேட்பாளர் கனவில் இருந்தது பலிக்காமல் போனது. இவர்களின் நிலை இப்படி என்றால், தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ மனோன்மணி மீண்டும் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வலம் வந்தார். அவரை அதிமுக தலைமை ஒதுக்கிவிட்டு ராஜா என்கிற ராஜ முத்துவுக்கு சீட் வழங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளது.

திமுக வேட்பாளர் தருண்

மனோன்மணி வீரபாண்டி ஆறுமுகத்தின் அண்ணன் பழனியப்பனின் மகள். ஒட்டுமொத்தமாக சேலம் மாவட்டத்தின் அசைக்க முடியாத சக்திகளாக விளங்கிய வீரபாண்டி ஆறுமுகத்தின் ரத்த சொந்தங்களுக்கு இந்தமுறை இரண்டு கட்சிகளும் சீட் வழங்காமல் ஒதுக்கி வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினரின் வாக்கு வங்கி அதிகம் உள்ள பகுதியாக விளங்கும் வீரபாண்டி தொகுதியில் இந்த முறை திமுக வெற்றி பெறுவது சிரமம் என்றாலும், தலைமைக்குக் கட்டுப்பட்டு தேர்தல் பணி ஆற்றுவோம்” என்று தெரிவித்தார்.

அமமுக வேட்பாளர் எஸ். கே.செல்வம், வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி குப்புசாமியின் மகன் என்பதால் அவருக்கு வாக்குகள் அதிகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் வீரபாண்டி தொகுதியில் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர்கள், ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதால், செல்வத்துக்கு கூடுதல் வாக்குகள் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

ஏரி பிரச்னையை தீர்த்து வைப்பேன்:

வீரபாண்டி தொகுதியின் கள நிலவரம் குறித்து அதிமுக வேட்பாளர் ராஜா என்கிற ராஜமுத்துவிடம் கேட்டபோது, "அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு ஆதரவாக பரப்புரை செய்து வருகின்றனர். பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராக உள்ளனர். கூட்டணிக் கட்சியினரின் தேர்தல் பரப்புரை செயல்பாடு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது. கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. நான் வெற்றி பெற்றால் நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பனமரத்துப்பட்டி ஏரி பிரச்சனையை தீர்த்து வைப்பேன். அந்த ஏரியை தூர்வாரி நீர் நிரப்பும் நடவடிக்கைகளை எடுத்து பனமரத்துப்பட்டி ஏரியை சுற்றுலாத் தலமாக்குவேன் என்று தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர் ராஜா

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்:

அதேபோல திமுக வேட்பாளர் டாக்டர் தருண் கூறுகையில், 'வீரபாண்டி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை எடுத்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வேன்' என்றார். உட்கட்சி நிலவரங்கள் குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டார். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வீரபாண்டி தொகுதி தேர்தல் முடிவு சேலம் அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

Last Updated : Mar 30, 2021, 11:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details