மருத்துவ படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. மேலும் 8 உயர் சிறப்பு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கினால் அவற்றின் சிறப்பு குன்றிவிடும் என காரணம் கூறி, இட ஒதுக்கீட்டின் வருபவர்கள் தகுதியற்றவர்கள் போல அவற்றிலும் இட ஒதுக்கீடை விலக்கி வைத்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை கண்டித்தும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு:
மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில், மேற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்கர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மண்டல அமைப்பு செயலாளர் என். விநாயகமூர்த்தி, முற்போக்கு மாணவர் கழக மாநில செயலாளர் கோவை குமணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
நாமக்கல்:
27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மற்றும் முதுநிலை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மத்திய தொகுப்பில் ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க கோரியும் பிற்படுத்தப்பட்ட மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க மாநில அரசுகள் அழுத்தம் தர வலியுறுத்தியும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ. 10ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோருதல், சென்னையில் கரோனா பரவலை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கக்கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற அதே இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மற்றொரு அணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இரண்டு தரப்பினரும் காவல்துறை அனுமதி பெறாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் தனித்தனியாக வந்து ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் :
புதிய ரயில் நிலையம் முன்பாக ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள தாழ்த்தப்பட்ட தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப் படுவதை கண்டித்தும், திருவாரூர் மாவட்டம் முழுவதும் சிறு குறு வாய்க்கால்கள் அனைத்தையும் தூர்வார வேண்டும்.
கரோனா ஊரடங்கு காரணமாக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
மத்திய அரசு ஓபிசி மாணவர்கள் மருத்துவ கல்வி மற்றும் உயர் கல்விக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்து எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரியும் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மீரா திரையரங்கு அருகில் நடைபெற்றது,
ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் சித்தார்த்தன் கூறும்போது ”ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி மற்றும் உயர் கல்வியில் இட ஒதுக்கீடு ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது இதனால் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே இட ஒதுக்கீடு ரத்து செய்து உடனடியாக திரும்பப் பெற வேண்டும், மேலும் மருத்துவ கல்வி, உயர் கல்வி போன்ற அனைத்து கல்வியிலும் எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கு முழுமையாக இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்” என கூறினார்,
உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக கைது ஆர்ப்பாட்டத்தின் முடிவில் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் ரவி குமார் தலைமையிலான காவல்துறையினர் நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கிய நிலையில் 40 பேர் வரை உரிய அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக கைது செய்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது இதனை எடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்:
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் , மாவட்ட மாநகர துணை செயலாளர் கி. காயத்ரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயச்சந்திரன்," மத்திய பாஜக அரசு நீட்தேர்வு என்ற போர்வையில் மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்திருக்கிறது. அதன் படி ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் மருத்துவக் கல்வி பயில இயலாத நிலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இதே நடவடிக்கையை மத்திய அரசு தொடருமானால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் " என்று தெரிவித்தார்.
அரியலூர் :
அரியலூர் அண்ணா சிலையருகில் அண்ணா சிலையருகில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வநம்பி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் ஓபிசி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும், பொதுத்துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:'காலைப் பிடிப்பதுதான் கோட்டைக்கான வழி...!' - எடப்பாடி மீது விமர்சன கணைகள் தொடுக்கும் உதயநிதி