சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தாய்மடி அறக்கட்டளை இயக்குனர் திருநங்கை தேவி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லை. நான், நாம் தமிழர் கட்சியில் இணைந்த பிறகு தாய்மடி அறக்கட்டளையின் மூலமாக ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்ய இயலவில்லை. நிதி உதவி கேட்க சென்றால் நீங்கள் அரசியல் கட்சியில் தானே இருக்கிறீர்கள் என்று கேட்டு புறக்கணிக்கிறார்கள். இதனால் ஆதரவற்றவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதை தொடர முடிவு செய்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட எனக்கு சீமான் வாய்ப்பளித்தார்.திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தை கொடுத்த சீமான் அண்ணனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சேலம் மட்டுமல்லாது தர்மபுரி ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் எனது தாய்மடி அறக்கட்டளை சார்பில் கிளைகள் அமைக்கப்பட்டு ஆதரவற்றோருக்கு உதவி செய்திட முடிவெடுத்துள்ளேன். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.